'என் கிணற்றில் இருந்த தண்ணீரைக் காணோம்': சினிமா பாணியில் நூதனப் புகார்

'என் கிணற்றில் இருந்த தண்ணீரைக் காணோம்': சினிமா பாணியில் நூதனப் புகார்

சினிமா பாணியில், கிணற்றில் இருந்த 18 அடி தண்ணீரைக் காணவில்லை. அது என்ன ஆனது என கண்டுபிடித்துத் தருமாறு புவியியல் துறை அதிகாரிகளுக்கு ஒருவர் புகார் மனு கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே வெங்கனாச்சேரியை அடுத்த தண்டாச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சதீஸ். இவர் நேற்று முன் தினம் வீட்டில் தூங்கச் செல்லும் போது கிணற்றில் 18 அடி தண்ணீர் இருந்ததாக கூறப்படுகிறது. அடுத்தநாள் காலையில் பார்த்தபோது கிணறு வறண்டுபோய் காட்சியளித்திருக்கிறது. வெறும் அரை அடிக்கும் குறைவாகவே தண்ணீர் இருந்திருக்கிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சதீஸ், என் கிணற்றில் இருந்த தண்ணீரைக் காணோம் என புவியியல் துறையினருக்கு புகார் கொடுத்துவிட்டு தண்ணீரைத் தேடி அலைகிறார்.

இதுகுறித்து சதீஸ் கூறுகையில் “கேரளத்தில் தற்போது நல்லமழை பெய்துவருகிறது. என் ஊரிலும் மழைதான். என் வீட்டில் தேங்கு மழைநீரையும் கிணற்றை நோக்கியே திருப்பிவிட்டுள்ளேன். அதனால் காலையில் விடிந்ததும் நீர்மட்டம் எவ்வளவு இருக்கிறது என கிணற்றை எட்டிப் பார்த்தேன். ஆனால் இயல்பாகவே இருந்த தண்ணீரும் மாயமாகி இருந்தது. இதுகுறித்து புவியியல் துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளேன். மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும் அழைத்துச் சொன்னேன். அவர்கள் திருச்சூர் மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுக்கச் சொன்னார்கள். அதையும் கொடுத்தேன்.

பக்கத்து வீடுகளில் இருக்கும் கிணறுகளையும் போய் பார்த்தேன். அங்கும் தண்ணீர் உயரவில்லை. ஒருவேளை என் கிணற்றின் கீழே இருக்கும் பாறைப்பகுதிக்கும் கீழே தண்ணீர் போய்விட்டதா என்பது பற்றித் தெரியவில்லை ”என்றார்.

தமிழ் சினிமா ஒன்றில் நகைச்சுவை நடிகர் வடிவேலு, போலீஸ் அதிகாரியாக இருக்கும் நெல்லை சிவாவிடம் கிணற்றைக் காணோம் என புகார் கொடுப்பார். அந்த சம்பவத்தையே மிஞ்சும் அளவுக்கு தற்போதைய புகார் மாறியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in