மிஸ் தமிழ்நாடு அழகியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம்: கொல்கத்தாவில் பதுங்கியிருந்த எஸ்.ஐ கைது

ஆண்ட்ரூஸ் கால்டுவெல்
ஆண்ட்ரூஸ் கால்டுவெல்

வெளிநாட்டு வாழ் இந்தியரான மிஸ் தமிழ்நாடு அழகியை ஏமாற்றி சொத்துகளை அபகரித்ததுடன், பாலியல் வன்கொடுமை செய்து விட்டு கொல்கத்தாவில் பதுங்கியிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கோவிலம்பாக்கத்தை சேர்ந்தவர் ஷீபா(37). வெளிநாட்டு வாழ் இந்தியரான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மிஸ் தமிழ்நாடு அழகி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். சமூக சேவையில் ஆர்வம் கொண்ட ஷீபா, சென்னை பரங்கிமலை பகுதியில் சமூகப்பணியில் ஈடுபட்டிருந்த போது காவல் துறையைச் சேர்ந்த ஒருவர் அறிமுகமாகியுள்ளார். தன் பெயர் ஆண்ட்ரூஸ் கால்டுவெல் என்றும், காவல் ஆய்வாளராக பணியாற்றுவதாக கூறி நட்பாக பழகியுள்ளார். சென்னை ஓஎம்ஆர் படூர் ஊராட்சியில் வங்கி மூலம் வீடு ஒன்றை ஷீபா வாங்கிய பிரச்சினை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. தன்னை ஏமாற்றிய வங்கி மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர ஆண்ட்ரூஸ் கால்டுவெல்லை ஷீபா அணுகியுள்ளார். அவரும் வழக்கறிஞரை ஏற்பாடு செய்து தந்துள்ளார்.

இந்த நிலையில், வெளிநாட்டில் வசித்த ஷீபாவின் தாய் நோயால் இறந்தார். இதனால் மனமுடைந்த ஷீபாவிற்கு, ஆண்ட்ரூஸ் கால்டுவெல் ஆதரவாக பேசி, உங்கள் வீட்டிற்குள் யாரோ சூனியம் வைத்து விட்டனர் என்றும், உங்கள் தாய் போல் தந்தையும் சிறிது நாட்களில் இறந்து விடுவார் எனக்கூறியுள்ளார். அத்துடன் சிறப்பு ஜெபம் செய்ய வேண்டும் என்று போதகர் ஒருவரையும், தனது தாய் மற்றும் சகோதரி ஆகியோரை அங்கு அழைத்து சென்றுள்ளார். சாத்தானை விரட்டி சூனியம் எடுக்க 40 நாட்கள் வரை விரதம் இருந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும், அப்போது உறவினர்கள் மற்றும் வீட்டு வேலையாட்கள் யாரும் இருக்கக்கூடாது என்று ஆண்ட்ரூஸ் கூறியுள்ளார். அதே போல அவர்களை வெளியேற்றி விட்டு ஆண்ட்ரூஸ் தங்களது ஆட்களை வைத்து சிறப்பு பிராத்தனை செய்துள்ளார். இதனால் அவரை ஷீபா முழுமையாக நம்பியுள்ளார்.

இந்த நிலையில், தனக்குத் திருமணமாகவில்லை என்றும், உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஷீபாவிடம் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார். இதனால் இவர்கள் இருவரும் கணவன், மனைவி போல் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். இதன் பின் அவரிடமிருந்து சொத்துப் பத்திரங்கள், நகைகள், வங்கிக் கணக்கிலிருந்த பணம் என ஒவ்வொன்றாக ஆண்ட்ரூஸ் பெற்றதுடன், ஷீபாவை வாடகை விட்டில் தங்க வைத்துள்ளார்.

அந்த சமயத்தில் ஆண்ட்ரூஸ்சின் ஆதார் கார்டு ஷீபாவிடம் சிக்கியது. அதை வைத்து அவர் விசாரித்த போது 56 வயதான ஆண்ட்ரூஸ் ஏற்கெனவே திருமணமாகி ஆலந்தூர் காவல் குடியிருப்பில் வசித்து வருவதும், போக்குவரத்து பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஷீபா, இதுகுறித்து ஆண்ட்ரூஸிடம் கேட்டுள்ளார். அதற்கு உன் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என்று ஷீபாவை ஆண்ட்ரூஸ் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ் மீது ஷீபா புகார் அளித்தார். இதன் பேரில் ஆண்ட்ரூஸ், அவரது தாய் , சகோதரி மற்றும் கூட்டாளி சுந்தர் ஆகியோர் மீது பாலியல் பலாத்காரம் செய்தல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், ஆண்ட்ரூஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர் ரவுடிகளின் உதவியுடன் ஷீபாவை மிரட்டியுள்ளார். இதுகுறித்து ஷீபா புகார் அளித்ததன் பேரில் ஆண்ட்ரூஸ் மீது மற்றொரு வழக்கையும் போலீஸார் பதிவு செய்தனர்..

இந்த இரண்டு வழக்கில் முன்ஜாமீன் பெற ஆண்ட்ரூஸ் நீதிமன்றத்தை நாடினார். அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன், அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து தலைமறைவான ஆண்ட்ரூஸ் கொல்கத்தாவில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீஸார் அங்கு சென்று ஆண்ட்ரூஸ்சை கைது செய்து நேற்று இரவு சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான ஆண்ட்ரூஸ் மீது ஏற்கெனவே வெளிநாடு வாழ் தொழிலதிபர் ஒருவரை கடத்திச் சென்று 1.47 கோடி ரூபாய் கொள்ளையடித்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in