இன்ஸ்டாகிராமில் காதல்... ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம்: மதுரை சிறுமிக்கு இளைஞரால் நடந்த கொடுமை

இன்ஸ்டாகிராமில் காதல்... ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம்: மதுரை சிறுமிக்கு இளைஞரால் நடந்த கொடுமை

சிறுமியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி காதலித்து, அவரிடம் இருந்து 10 பவுன் நகைகளை ஏமாற்றி, சிறுமியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட நபர் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை மாநகர் கே. புதூரைச் சேர்ந்தவர் பயாஸ்கான். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் மதுரையைச் சேர்ந்த சிறுமி ஒருவருடன் பழகி உள்ளார். நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. மேலும், அச்சிறுமியிடம் பலமுறை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பயாஸ்கான், அச்சிறுமியிடம், இருவரும் ஊரை விட்டுச் சென்று விடலாம் என்றும், அதற்காக, வீட்டில் உள்ள நகைகளை எடுத்து வரச் சொல்லியும் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

அவரது வார்த்தைகளை நம்பிய சிறுமி, தனது வீட்டில் இருந்த 10 பவுன் நகைகளை எடுத்துச் சென்று அவரிடம் கொடுத்துள்ளார். நகைகளை பெற்றுக்கொண்டு பயாஸ்கான் தலைமறைவாகி உள்ளார். இதனைத் தொடர்ந்து, நடந்த சம்பவங்களை வீட்டில் சிறுமி கூறியதை அடுத்து சிறுமியின் பெற்றோர், தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த காவல்துறையினர் பயாஸ்கானை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், 10 பவுன் நகையை எப்படி பணமாக மாற்றுவது என்று பயாஸ்கான் தனது நண்பர்கள் சரவணகுமார் மற்றும் சதீஷிடம் ஆலோசனை நடத்தி உள்ளார். தொடர்ந்து நகைகளை சரவணக்குமாரின் தாய் முத்துலட்சுமி உதவியுடன் அடமானம் வைப்பது என்று முடிவெடுத்துள்ளனர். அதன்படி, முத்துலட்சுமி 10 பவுன் தங்க நகையை அடமானம் வைத்து ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்தை பயாஸ்கானிடம் கொடுத்துள்ளார். பயாஸ்கான் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை எடுத்து கொண்டு, மீதம் இருத்த பணத்தில் முத்துலெட்சுமிக்கு ரூ.50 ஆயிரமும், சதீஷ்க்கு ரூ.20 ஆயிரமும், சரவணக்குமாருக்கு ரூ.30 ஆயிரம் என பங்குபோட்டுக் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பயாஸ்கான், சதீஷ், சரவணக்குமார், முத்துலட்சுமி ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அடகு கடையில் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான 10 பவுன் நகைகளையும் காவல்துறையினர் மீட்டுக் கொடுத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in