‘ஆய்வு செய்துவிட்டு பேசியிருக்க வேண்டும்’ - பியூஷ் கோயலின் தரமற்ற அரிசி புகாருக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்

அமைச்சர் சக்கரபாணி
அமைச்சர் சக்கரபாணி

தமிழகத்தில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தவறான தகவலை கூறியுள்ளார் என தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தரமற்ற அரிசி குறித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, “ ரேஷன் கடைகளில் தரமான அரிசிதான் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஒரு ரேஷன் கடையில் ஆய்வு செய்துவிட்டு இந்த குற்றச்சாட்டைச் சொல்லி இருந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்று இருப்போம். அதிகாரிகளிடம் கூட கேட்காமல், கடையில் சென்று ஆய்வும் செய்யாமல் பாஜக கட்சிக்காரர்கள் சொல்வதைக் கேட்டுவிட்டு இப்படிக் கூறி வருகிறார். பாஜகவினர் எப்போதுமே உண்மைக்கு புறம்பாகத்தான் பேசி வருகிறார்கள். குற்றம்சாட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் அதிகாரிகளிடம் கூட கேட்காமல், மத்திய அமைச்சர் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியுள்ளது வருத்தம் அளிக்கிறது. மத்திய அமைச்சர் முழுக்க முழுக்க அரசியல் காரணமாகவே இந்த குற்றச்சாட்டினை கூறியுள்ளார்.

712 ஆலைகள் மூலமாக தரமான அரிசியை வழங்கி வருகிறோம். ரேஷன் அரிசி அரைக்கப்படும் அரசு மற்றும் தனியார் ஆலைகளுக்கு சென்று இந்திய உணவு கழகத்தின் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அப்படி இருக்கையில் எப்படி தரமற்ற அரிசியை வழங்க முடியும். ஜூன் மாதத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கோவைக்கு வந்தபோது பொதுவிநியோகத் திட்ட கடைகளின் வடிவமைப்பை பாராட்டிவிட்டுச் சென்றார். அதேபோல கடந்த மாதம் சென்னை வந்து ரேஷன் கடைகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, அனைத்து பொருட்களும் தரமாக இருப்பதாக பாராட்டினார். மத்திய அரசு அதிகாரிகளின் ஆய்வுக்குப் பின்னரே ரேஷன் கடைகளுக்கு அரிசி செல்கிறது. ஒருவேளை சில இடங்களில் தவறு இருந்தால், அவை திரும்பப் பெறப்படுகிறது” என தெரிவித்தார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in