இலங்கைத் தமிழர் முகாம் மாணவியின் படிப்புக்கு உதவிய பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

பழனிவேல் தியாகராஜனுக்கு  நன்றி கூறும் மாணவி மற்றும் குடும்பத்தினர்
பழனிவேல் தியாகராஜனுக்கு நன்றி கூறும் மாணவி மற்றும் குடும்பத்தினர்
Updated on
1 min read

மேல்படிப்புக்கு போதிய வசதி இன்றி தவித்த இலங்கைத் தமிழர் முகாமில் உள்ள தமிழ் மாணவியின் மேற்படிப்புக்கு, தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உதவியுள்ளது, அவர்களை பெரிதும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

திமுக அரசு பதவி ஏற்றதும் 'இலங்கை அகதிகள் முகாம்' என்பதை 'இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 'இந்தப் பெயர் மாற்றம் வெறும் பலகை அளவில் மட்டும் நின்றுவிடக்கூடாது' என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

அவர் சொன்னதை நடைமுறைப் படுத்தும் வகையில் முகாம் தமிழர்களுக்கு பலர் நேரடியாகவும், தனிப்பட்ட முறையிலும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் மதுரை ஆணையூர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள  மாணவி ரித்யுஷா என்பவரின்  மேற்படிப்புக்கு தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் உதவியுள்ளார்.

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 600க்கு 591 மதிப்பெண் எடுத்து மாணவி ரித்யுஷா சாதனை புரிந்திருந்தார். தனியார் தொலைக்காட்சி மூலம் மாணவி குறித்து அறிந்த அமைச்சர், அம்மாணவியையும், அவரது பெற்றோரையும் தனது இல்லத்திற்கு அழைத்து வாழ்த்தினார்.

"படிக்க வசதியில்லை, அதனால்  ஆன்லைன் மூலம் கல்வி கற்க உள்ளேன்" என அப்போது அந்த மாணவி சொன்னதை கேட்டு அதிர்ந்த அமைச்சர்,  கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டியதன் அவசியத்தை மாணவிக்கு எடுத்து கூறினார். அது மட்டும் இல்லாமல் உடனடியாக ’டோக் பெருமாட்டி’ கல்லூரி முதல்வரிடம் அலைபேசியில் பேசி  அப்பெண்ணின் மேற்படிப்பு செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும், நல்ல மதிப்பெண் எடுத்த அம்மாணவிக்கு அவர் விரும்பும் துறையில் இடம் தர  வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். 

அதையடுத்து லேடி டோக் கல்லூரி முதல்வர், அம்மாணவிக்கு சிறப்பு அனுமதியின் அடிப்படையில் இடம் தற்போது ஒதுக்கியுள்ளார்.  தான் எடுத்த மதிப்பெண்ணுக்கு ஏற்ற படிப்பில் இடம் பெற்றுத்தந்து, கல்லூரிக் கட்டணத்தையும் செலுத்திய அமைச்சருக்கு, அவரின்  இல்லம் தேடி வந்து மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்து மாணவி ரித்யுஷா நன்றி தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in