`என்எல்சிக்கு புதிதாக நிலம் எடுக்க திட்டம் இல்லை- அமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி

கருணைத் தொகை வழங்கும் அமைச்சர் பன்னீர்செல்வம்
கருணைத் தொகை வழங்கும் அமைச்சர் பன்னீர்செல்வம் `என்எல்சிக்கு புதிதாக நிலம் எடுக்க திட்டம் இல்லை- அமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி

``நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்காக புதியதாக நிலம் கையகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை''  என அமைச்சர் பன்னீர்செல்வம் உறுதியாக தெரிவித்துள்ளார்.

என்எல்சி நிறுவனத்துக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை,  நிலத்திற்கு உரிய இழப்பீடு ஆகியவற்றை என்எல்சி நிறுவனம் வழங்க வேண்டும்  என்பது அந்த பகுதி மக்களின் நீண்ட கால போராட்டமாக இருக்கிறது. அந்த கோரிக்கைகளை என்எல்சி நிர்வாகம் நிறைவேற்றாததால் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து பல்வேறு கட்டமாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் நிலம் கொடுத்தவர்கள்  ஒரு சிலருக்கு பணி ஆணையும், ஒரு சிலருக்கு கூடுதல் தொகையையும்  அளிக்கும் நிகழ்ச்சியை ஆட்சியர் அலுவலகத்தில்  என்எல்சி நிர்வாகம் நேற்று நடத்தியது.  இந்த நிகழ்ச்சியில்  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் என்எல்சிக்கு நிலம்  கொடுத்து அதற்காக ஏக்கர் ஒன்றுக்கு  ஐந்து முதல் ஆறு லட்ச ரூபாய் வரை பெற்றுக் கொண்டிருந்தவர்களில் ஏழு பேருக்கு  தற்போது  ஒருமுறை கருணைத் தொகையாக  மூன்று லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. என்எல்சிக்கு நிலம்  கொடுத்த உரிமையாளர்களின்  வாரிசுகள் 10 பேருக்கு என்எல்சி நிறுவனத்தில்  பணி நியமனம் வழங்கப்பட்டது.

பணி நியமனம்  மற்றும் கருணைத்தொகையை  வழங்கிய அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறுகையில், "ஏற்கெனவே நிலம் மற்றும் வீடுகளை இழந்தவர்களுக்கு, தற்போது கூடுதல் இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  என்எல்சி நிறுவனத்திற்காக 25,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் போவதாக வரும் தகவல் உண்மை அல்ல. 5 ஆண்டுகளுக்கு என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு தேவையான 2500 ஏக்கர் நிலம் ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்டுவிட்டது.

மேலும் புதியதாக 3,000 பேருக்கு என்எல்சி நிறுவனம் வேலை வாய்ப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது" என்று  தெரிவித்தார்.

இடம் கொடுத்தவர்களின் வாரிசுகளுக்கு பணியும்,  கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகை ஆகியவற்றை வழங்குவதை என்எல்சி நிறுவனம்  தொடர்ந்து பின்பற்றுமேயானால் அந்த பகுதி மக்களின்  போராட்டங்கள் ஓயும், அவர்களின்  வாழ்வாதாரம் உயரும். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in