மயிலாடுதுறையில் கனமழையால் பாதிக்கப்பட்ட 40,031 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம்

நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி
நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களைச் சேர்ந்த  விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணத்தொகை வழங்கும் பணியை அமைச்சர் மெய்யநாதன் இன்று  தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டங்களில் கடந்த நவ.11-ம் தேதி பெய்த அதீத  கனமழையால் பெரும்பாலான விளைநிலங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன. அதனையடுத்து சீர்காழிக்கு  நேரில் வந்து பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி  மயிலாடுதுறை மாவட்டத்தில்  பாதிக்கப்பட்ட  32,533 ஹெக்டேர் பயிர்களுக்கு, ஹெக்டேர் ஒன்றுக்கு 13,500  ரூ நிவாரணம் வழங்க உத்தரவிட்டு கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது.

இதற்காக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 43.92 கோடி நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட 40,031 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்கும் பணி இன்று தொடங்கியது. 

சீர்காழி அருகே கடவாசல் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இன்று நடைபெற்ற விழாவில் சுற்றுச்சூழல்,  காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் லலிதா ஆகியோர்  விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் பணியைத் தொடக்கி வைத்தனர். இதில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் திருவிடைமருதூர் ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் இன்று முதல் இடுபொருள் நிவாரணத் தொகை செலுத்தும் பணி தொடங்கியது. ஒரு சில தினங்களுக்குள் அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணத்தொகை  செலுத்தப்பட்டு விடும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in