`டெல்டாவில் பேரழிவு திட்டத்திற்கு அனுமதியே கிடையாது'- நேரில் சந்தித்த விவசாயிகளிடம் உறுதியளித்த அமைச்சர்

மெய்யநாதனை சந்தித்து மனு கொடுக்கும் விவசாயிகள்
மெய்யநாதனை சந்தித்து மனு கொடுக்கும் விவசாயிகள்

காவிரி டெல்டாவில் எந்த ஒரு இடத்திலும் பேரழிவு திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என முதல்வர் உறுதியளித்துள்ளதாக தன்னை சந்தித்த விவசாயிகளிடம் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள பெரியகுடி கிராமத்தில் மூடப்பட்டிருந்த கிணற்றை மீண்டும் இயக்கத்திற்கு கொண்டுவர ஓஎன்ஜிசி முயற்சி மேற்கொண்டது. இது தொடர்பாக கடந்த மாதம் 26-ம் தேதியன்று மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் காவிரி டெல்டாவில் ஓஎன்ஜிசி மீண்டும் புதிய பணிகளை தொடங்கவோ மூடப்பட்ட கிணறுகளில் இருந்து எண்ணெய் மற்றும் ஹைட்ரோ கார்பன் ஆகியவற்றை எடுக்கவோ அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் இன்று சந்தித்து மனு அளித்தார்.

அப்போது அவரிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், "காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்ட எல்லைக்குள் எந்த ஒரு இடத்திலும் பேரழிவு திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது. குறிப்பாக ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் எடுக்கிறோம் என்கிற பெயரிலும், மூடப்பட்ட கிணறுகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கிறோம் என்கிற அடிப்படையில் பல்வேறு அனுமதிகளை பெற முயற்சித்தாலும் தமிழக முதல்வர் அதற்கு நிரந்தர தடை விதித்துவிட்டார்.

எனவே ஏற்கெனவே அனுமதி பெற்றோம் என்கிற பெயரில் புதிதாக கிணறுகள் அமைக்கவோ, மூடப்பட்டுள்ள கிணறுகளை மறு செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் அனுமதிக்க கூடாது எனவும், அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள கிணறுகளை நிரந்தரமாக மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக பெரியகுடி கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கிற ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறு பேரழிவு ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் தற்போதைய நிலையில் அக்கிணற்றை நிரந்தரமாக மூடாவிட்டால் அப்பகுதியில் வெடித்து சிதறி பேரழிவு ஏற்படும் நிலை உள்ளதால் அதனை நிரந்தரமாக மூடி விட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் யாருடையை நிர்பந்தத்தையோ, தலையீட்டையோ அனுமதிக்க மாட்டார். காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட மண்டலம் என்பதில் உறுதியாக உள்ளார்.அதற்கான உரிய உத்தரவுகளை எங்களுக்கு வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த தகவலை நம்மிடம் தெரிவித்த பி.ஆர் பாண்டியன், "அதேபோல களப்பால் பகுதியில் அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் பகுதிகளில் உள்ள 5க்கும் மேற்பட்ட கிணறுகளில் ஏற்கெனவே கச்சா எடுக்கப்பட்டு கிணறுகள் வற்றிய நிலையில் கிணறுகளிலிருந்து விஷவாயு கசிவு ஏற்படும் என்ற அச்சத்தால் தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் தொடர்கிறது. இதனால் அப்பகுதி பள்ளி மாணவர்கள் பொதுமக்களுக்கு எந்நேரமும் பேராபத்து ஏற்படும் அச்சத்தில் வாழ்ந்து கொண்டுள்ளனர். அக்கிணறுகள் அனைத்தையும் உடனடியாக நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தோம். அதற்கும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in