ஜல்லிக்கட்டு விரைவில் விளையாட்டுப் போட்டியாக மாற்றம்: அமைச்சர் மெய்யநாதன் திட்டவட்டம்

இலவச மிதிவண்டி வழங்கும் விழாவில்
இலவச மிதிவண்டி வழங்கும் விழாவில்

ஜல்லிக்கட்டு போட்டி விரைவில் விளையாட்டு போட்டியாக மாற்றப்பட உள்ளது என்று மாநில சுற்றுச்சூழல்,  காலநிலை மாற்றம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் மெய்யநாதன் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஜல்லிக்கட்டு மைதானம் இதுவரை உலகத்தில் இல்லாத வகையில் மிகப் பிரமாண்டமான முறையில் மதுரையில் அமைக்கப்பட உள்ளது. அடுத்த கட்டமாக ஜல்லிக்கட்டை விளையாட்டாக மாற்றுவதற்கான சட்ட விதிகளை உருவாக்கும்  நடவடிக்கைகள்  தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அது முழுவடிவம் பெற்ற பிறகு ஜல்லிக்கட்டை விளையாட்டாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறுகிய காலம் இருப்பதால் நிகழாண்டில் ஜல்லிக்கட்டை விளையாட்டாக மாற்றுவதற்கு வாய்ப்பு இல்லை.

விளையாட்டுத் துறையை தமிழக முதல்வர் நேரடி பார்வையில் கையாண்டு வருகிறார். தேவைக்கேற்ப எந்தெந்த சூழ்நிலையில் எதற்கு நிதி ஒதுக்க வேண்டுமோ அதற்கான சிறப்பு நிதிகளை ஒதுக்கி விளையாட்டுத் துறையை மேம்படுத்தி வருகிறார்.

செஸ் ஒலிம்பியாட் தொடரைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு உலக மகளிர் டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு தமிழக முதல்வர் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர் வெற்றிக்குப் பிறகு உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தியாவில் விளையாட்டின் தலைநகராக சென்னையை மாற்றுவதற்கான நடவடிக்கையில் முதல்வர் ஈடுபட்டுள்ளார்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in