‘அரசு கேபிள் கட்டணம் உயர்கிறதா’? -துறை அமைச்சர் விளக்கம்!

அரசு கேபிள் சேவை
அரசு கேபிள் சேவை

அரசு கேபிள் டிவி சேவைக்கான கட்டணம் உயர்த்தப்படுகிறதா, என்ற கேள்விக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று புதிய விளக்கமளித்துள்ளார்.

சரிவிலிருக்கும் அரசு கேபிள் டிவி இணைப்புக்கான கட்டமைப்புகளை சீர் திருத்துவது, சேவை தொடர்பான புகார்களை விரைந்து சரி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதன் மத்தியில் அரசு கேபிள் டிவி இணைப்புக்கான மாதாந்திர கட்டணத்தை அரசு உயர்த்த இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. தனியார் கேபிள் சேவையாளர்களின் கட்டணத்தோடு ஒப்பிடுகையில், அரசு கேபிள் டிவி இணைப்புக் கட்டணம் சகாயமானது என்பதால், அதன் கட்டணம் உயர்த்தப்படுவது சாமானியர்களை பாதிக்கும் என்ற கவலையும் நிலவி வருகிறது.

இதனிடையே தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் துணை மேலாளர்கள் மற்றும் டிஜிட்டல் சிக்னல் விநியோகிப்பாளர்களின் செயல்பாடுகள் குறித்தான ஆலோசனைக் கூட்டம், சென்னை கோட்டூர்புரத்தில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ.தங்கராஜ், அரசு கேபிள் டிவி சேவைக்கான கட்டணம் தொடர்பான பத்திரிக்கையாளர்களின் கேள்விகளை எதிர்கொண்டார்.

அரசு கேபிள் கட்டணம் உயர்வது குறித்து நேரடியாக பதிலளிக்காத அமைச்சர், மத்திய அரசின் விலையேற்ற நடவடிக்கைகள் குறித்து ஒரு சுற்று புகார் வாசித்தார். ’எரிபொருள் விலையேற்றம் தொடங்கி ஜிஎஸ்டி வரை பல்வேறு வகையில் மக்களை சுரண்டியும், துன்புறுத்தியும் வருவதாக’ குற்றம்சாட்டினார். பின்னர் அரசு கேபிள் கட்டணத்துக்கு வந்தவர், “இப்போதைக்கு அரசு கேபிள் சேவைக்கான கட்டணத்தை தமிழக அரசு உயர்த்துவதாக இல்லை” என தெரிவித்தார்.

அமைச்சரின் பதில் திட்டவட்டமாக இல்லாததும், ’இப்போதைக்கு கட்டண உயர்வு இல்லை’ என்ற மழுப்பலும், கட்டண உயர்வு அரசின் பரிசீலனையில் இருப்பதையே காட்டுகிறது. கூடுதல் சேனல்கள் மற்றும் புதிய வசதிகள் அறிமுகத்துடன், புதிய கட்டண உயர்வு விரைவில் அறிவிப்பாகும் என்றும் சொல்லப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in