`தென் மாவட்ட மக்களின் ஆசையை முதல்வர் நிறைவேற்றுவார்': அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன்

`தென் மாவட்ட மக்களின் ஆசையை முதல்வர் நிறைவேற்றுவார்': அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன்

"மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக வர வேண்டும் என்று தென் மாவட்ட மக்களுக்கு ஆசை இருக்கிறது, அந்த ஆசையை முதல்வர் நிறைவேற்றுவார்" என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்காசி செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்த தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் மதுரை விமானத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "கடந்த சில நாட்களாக இரண்டு லட்சம் கனஅடியாக இருந்த காவிரி உபரி நீர் தற்பொழுது ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. மேலும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெள்ளம் குறித்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தஞ்சை, மயிலாடுதுறை, கரூர், நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 1,327 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 35 பேர் 49 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு அரசு சார்பில் உரிய வசதிகள் செய்து தரப்படுகிறது. அதுபோக திருச்சி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்புப் படையிலிருந்து 212 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களோடு, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 110 பேர் சேர்த்து மொத்தம் 312 பேர் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர்.

வெள்ள நிலவரம் கட்டுப்பாட்டில் உள்ளது. காவிரி ஆறு செல்லும் மாவட்டங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட கண்காணிப்பு குழு வெள்ளம் மற்றும் மீட்பு பணியினை பார்வையிட்டு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்" என்றார்.

தொடர்ந்து, அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அரசு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது தான் எங்களது நோக்கமும், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது குடியிருப்பு பிரச்சினைகள் வருகிறது. அதை மனிதாபிமானத்தோடு கவனத்தில் வைத்துக் கொண்டு அவர்களை அப்புறப்படுத்தி அதை அரசாங்கம் கையகப்படுத்தி வருகிறது" என்று பதிலளித்தார்.

மேலும், மதுரை விமான நிலையத்தின் விரிவாக்க பணிகள் குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அதற்கான பணிகளை அரசு மும்முரமாக செய்து வருகிறது. மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக வர வேண்டும் என்று தென் மாவட்ட மக்களுக்கு ஆசை இருக்கிறது. அந்த ஆசையை முதல்வர் நிறைவேற்றுவார்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in