மீண்டுவந்தவரிடம் 'ஜோக்’ அடித்த மத்திய அமைச்சர்: மீட்புப் பணியில் அதிருப்தி தெரிவிக்கும் மாணவர்கள்

மீண்டுவந்தவரிடம் 'ஜோக்’ அடித்த மத்திய அமைச்சர்: மீட்புப் பணியில் அதிருப்தி தெரிவிக்கும் மாணவர்கள்

போர்க்களத்திலிருந்து இந்தியர்களை மீட்கும் ‘ஆபரேஷன் கங்கா’ நடவடிக்கையை மேற்பார்வையிட உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கும் மத்திய அமைச்சர்களில் ஒருவரான கிரண் ரிஜிஜு, ‘கூ’ செயலியில் ஒரு காணொலியை வெளியிட்டிருக்கிறார்.

பல இன்னல்களுக்கு நடுவே, உக்ரைன் எல்லையைக் கடந்து ஸ்லோவாகியாவுக்கு வந்த இந்தியர்களை, பிடோவ்கே விமான நிலையத்தில் சந்தித்துப் பேசும் கிரண், அங்கிருந்த ஒரு இந்தியரைப் பார்த்து, “ஏன் வெறுமனே சட்டை மட்டும் அணிந்திருக்கிறீர்கள்? உங்களைப் பார்த்தால் எனக்கே குளிர் அடிக்கிறது” என்று கூறுகிறார்.

ஒருவேளை பெரும் துயரிலிருந்து ஒருவழியாக மீண்டு ஸ்லோவாகியா வந்தடைந்த இந்தியர்களைச் சிரிக்க வைக்கலாம் என்று அமைச்சர் நினைத்திருக்கலாம். ஆனால், நிலைமை அவ்வளவு சிலாக்கியமாக இல்லை என்பதும், இந்திய மாணவர்களில் பலர் இன்னமும் கடும் துயரில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும்தான் நிதர்சனம்.

'உக்ரைனில் இருந்த 20,000 இந்தியர்களில் ஏறத்தாழ 16,000 பேர் மீட்கப்பட்டுவிட்டார்கள். அவர்களில் இதுவரை, 6,400 பேர் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 15 விமானங்களில் 3,000 பேர் நாடு திரும்பியிருக்கிறார்கள்' என்கிறது வெளியுறவுத் துறை அமைச்சகம்.

எனினும், உக்ரைனில் சிக்கியிருப்பவர்களும், மீட்கப்பட்டவர்களும் இந்தியாவின் மீட்புப் பணிகளில் கடும் அதிருப்தி தெரிவித்துவருகிறார்கள்.

உக்ரைனின் அண்டை நாடுகளின் எல்லை வழியாகத் தப்பிச் சென்றவர்களில் பெரும்பாலானவர்கள், ரயிலில் கடும் கூட்ட நெரிசலில் பயணிக்க நேர்ந்ததாகவும், பலருக்கு ரயிலில் இடம் கிடைக்கவில்லை என்றும் பதிவுசெய்திருக்கிறார்கள். பலர் பல மைல் தூரம் நடந்தே சென்று எல்லைகளில் வெட்டவெளியில், நடுங்கும் குளிரில் நாட்கணக்கில் உணவும் தண்ணீரும் இல்லாமல் காத்திருக்க நேர்ந்ததை வேதனையுடன் பதிவுசெய்திருக்கிறார்கள்.

ஹங்கேரியிலிருந்து விமானம் மூலம் டெல்லி வந்தடைந்த ஒரு மாணவரிடம், ரோஜாப் பூவை நீட்டி வரவேற்றிருக்கிறார்கள் இந்திய அதிகாரிகள். அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என அந்த மாணவர் கேட்ட கேள்வி பல கசப்பான உண்மைகளைப் பட்டவர்த்தனமாகப் பதிவுசெய்திருக்கிறது.

கார்கிவ் நகரில் கர்நாடக மாணவர் நவீன் குமார் மரணமடைந்த பின்னர் மீட்புப் பணிகளில் சற்றே கூடுதல் கவனம் செலுத்துகிறது மத்திய அரசு. இந்நிலையில், மாணவர்கள் மரணமடைந்த பின்னர்தான் மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என உக்ரைனில் இப்போதும் சிக்கித் தவித்துவரும் மாணவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

கார்கிவ் நகரைவிட்டு நடந்தாவது வெளியேறுங்கள் என இந்தியர்களை இந்தியத் தூதரகம் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், போர் உச்சத்தில் இருக்கும் கார்கிவ், கீவ் போன்ற நகரங்களிலிருந்து வெளியேறி அண்டை நாடுகளின் எல்லைக்கு வருவது என்பது மிகப் பெரிய சவாலாக இருப்பதை அங்கிருக்கும் மாணவர்களின் காணொலிப் பதிவுகள் சொல்கின்றன.

உக்ரைன் போரில் மிக மோசமான கட்டம் இனிமேல்தான் வரவிருக்கிறது என பிரான்ஸ் அதிபர் மெக்ரானிடம் தொலைபேசியில் பேசிய ரஷ்ய அதிபர் புதின் கூறியிருக்கிறார். உக்ரைனை முழுமையாகக் கைப்பற்றும் வரை அவர் ஓயப்போவதில்லை என்றே பிரான்ஸ் அரசு வெளியிட்டிருக்கும் தகவலிலிருந்து தெரியவருகிறது. பொதுமக்கள் உயிரிழப்பதைத் தவிர்க்குமாறும், மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறும் மெக்ரான் கேட்டபோது, அதை புதின் ஆமோதித்திருக்கிறார். எனினும் அது குறித்து எந்த உத்தரவாதத்தையும் அவர் அளிக்கவில்லை. பொதுமக்களைக் குறிவைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்துவதாகச் சொல்லப்படுவதையும் அவர் மறுத்திருக்கிறார்.

இந்தப் போரால் இதுவரை 10 லட்சம் பேர் அகதிகளாகியிருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல, கல்வி வாய்ப்பை இழந்து தாய் மண் திரும்பியிருக்கும் நம் மாணவர்களுக்கும், எப்போது நாடு திரும்புவோம் என உக்ரைனில் கதறிக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் உரிய நியாயம் கிடைக்க வேண்டும்!

Related Stories

No stories found.