கேரள மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளராக கோவிந்தன் நியமனம்: அமைச்சர் பதவியைத் துறக்கிறார்

எம்.வி.கோவிந்தன்
எம்.வி.கோவிந்தன்

கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக எம்.வி.கோவிந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். கொடியேறி பாலகிருஷ்ணனுக்குப் பதிலாக புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் எம்.வி.கோவிந்தன் கேரள மாநில அமைச்சராக உள்ளார். மார்க்சிஸ்ட் கட்சி விதிகளின்படி ஆட்சியில் அதிகாரமிக்க பொறுப்பிலும், கட்சி பொறுப்பிலும் ஒரேநேரத்தில் இருக்கமுடியாது. இதனால் எம்.வி.கோவிந்தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் சூழல் எழுந்துள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக கொடியேறி பாலகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் கலால்துறை அமைச்சர் எம்.வி.கோவிந்தன் புதிய மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதற்கென நேற்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், பினராயி விஜயன் உள்ளிட்ட மூத்தத் தலைவர்கள் கலந்துகொண்டனர். புதிய மாநிலச் செயலாளர் தேர்ந்தெடுப்பிற்கு முன்பு இவர்கள் உடல்நலக் குறைவாக இருக்கும் கொடியேறி பாலகிருஷ்ணனையும் அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்தனர்.

நிகழாண்டு மார்ச் மாதம் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளராக கொடியேறி பாலகிருஷ்ணன் மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது புற்றுநோய் பாதிப்பால் அவர் தவிப்பதாலேயே புதிய மாநிலச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஸ் கொடியேறி அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கும் உள்ளாகியிருந்தார். இதனால் அந்தக்காலத்தில் மட்டும் பொறுப்பில் இருந்து கொடியேறி ஒதுங்கிக்கொள்ள தற்காலிகமாக விஜயராகவன் மார்க்சிஸ்ட் கட்சியின் கன்வீனராக நியமிக்கப்பட்டார். மீண்டும் 2021 டிசம்பரில் கொடியேறி பாலகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார். கொடியேறி பாலகிருஷ்ணன் 2006 முதல் 2011 வரையிலான அச்சுதானந்தன் அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் விதிப்படி ஒரேநேரத்தில் அரசுப்பணி, கட்சிப்பணி இரண்டையும் தொடர முடியாது என்பதால் எம்.வி.கோவிந்தன் அமைச்சர் பதவியை விரைவில் ராஜினாமா செய்வார் எனவும் கூறப்படுகிறது. கலாச்சாரத்துறை அமைச்சராக இருந்த சஜி செரியன் அண்மையில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் குறித்து பேசியது சர்ச்சையானதால் பதவி விலகினார். இதனால் அவரது கலாச்சாரம் மற்றும் திரைப்படத்துறை அமைச்சர் பணியிடமும் காலியாக உள்ளது. இதனால் இந்த இருதுறைகளுக்கும் இளைஞர்களை அமைச்சர்களாகக் கொண்டுவந்து, கட்சிக்குள் புது ரத்தம் பாய்ச்சவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வியூகம் வகுத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in