அரசு பள்ளி மாணவர்களுக்கு டேப்பா, மடிக்கணினியா?: தெளிவுபடுத்திய அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசு பள்ளி மாணவர்களுக்கு  டேப்பா, மடிக்கணினியா?: தெளிவுபடுத்திய அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசு பள்ளி மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் மடிக்கணினி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரிக்கு வந்திருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்த ஆண்டு மீண்டும் வழக்கம்போல் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் அறிக்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு டேப் கொடுப்பதாக கூறியிருந்த நிலையில், மாணவர்கள் கவனக்குறைவாக பயன்படுத்தினால் டேப் சேதாரம் ஆகும் என்பதால் மீண்டும் மடிக்கணினி கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.கடந்த ஆட்சியில் இரண்டு லட்சம் மடிக்கணினிகள் மாணவர்களுக்கு கொடுக்காமல் விடுபட்டுள்ளது. தற்போது அதனையும் சேர்த்து கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம்.

இந்த கல்வியாண்டில் அரசு பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை புதிதாக 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். தமிழக அரசு பள்ளிகளை நவீன முறையில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.போதை விழிப்புணர்வு குறித்து தமிழகத்தில் கடந்த 10 வருட காலமாக கண்டு கொள்ளாத நிலையில் தற்போதைய தமிழக அரசு அதுகுறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தி வருகிறது.பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள மதுக்கடைகளை அகற்றும் பணி தொடங்கப் பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் அந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது" என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in