
நடப்பாண்டு அரசுப் பொதுத்தேர்வுகளை எழுதாத மாணவர்களுக்கும், சிறப்பு வகுப்பு மற்றும் உடனடித் தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியளித்தார்.
கரோனா பாதிப்பின் மத்தியில் கடந்தாண்டு அரசுப் பொதுத்தேர்வுகளை அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் புறக்கணித்தனர். தேர்வு குறித்த கவலை, கரோனா குறித்த அச்சம், தனிப்பட்டோர் உடல்நிலை, குடும்ப சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இதன் பின்னணியில் கண்டறியப்பட்டன. ஆனால், கரோனா அச்சம் முழுமையாக விலகிய பின்னரான நடப்பு கல்வியாண்டின் இறுதியில் நடைபெறும் பொதுத்தேர்வில் பல்லாயிரம் மாணவர்கள் பங்கேற்காதது, பெற்றோர் - ஆசிரியர் மட்டுமன்றி பள்ளிக்கல்வித்துறைக்கும் அதிர்ச்சி தந்திருக்கிறது.
இவற்றின் மத்தியில் தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில் அவர்களுக்கு உதவ பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருக்கிறது. அதற்கான அறிவிப்பினை துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டிருக்கிறார். அதன்படி, ‘வழக்கமாக தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டு, அடுத்த ஒரு சில மாதங்களில் நடைபெறும் உடனடித் தேர்வின் மூலமாக, அந்த கல்வியாண்டே மேல் வகுப்புக்கு செல்லும் வாய்ப்பினை அவர்களுக்கு உறுதி செய்வார்கள். தற்போது தேர்வு எழுதாத மாணவர்களையும், தோல்வியடைந்த மாணவர்களுடன் சேர்த்து சிறப்பு வகுப்புகள் மூலம் உடனடித் தேர்வுக்கு தயார் செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாக’ அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
இதன் மூலம், தேர்வு எழுதாத மாணவர்கள் சிறப்பு வகுப்புகளின் மூலமாக உடனடித் தேர்வெழுதி அந்த கல்வியாண்டிலேயே சக மாணவர்களுக்கு இணையாக மேல் வகுப்புக்கு தேர்ச்சி பெற வாய்ப்பாகும். அமைச்சரின் இந்த அறிவிப்பு, பெற்றோர், ஆசிரியர் மற்றும் தவிர்க்க இயலாத காரணங்களினால் தேர்வு எழுத முடியாது போன மாணவர்கள் ஆகியோர் மத்தியில் ஆறுதலை தந்திருக்கிறது.