
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காய் ஏற்றிவந்த மினி டிம்போவை போலீஸார் தடுத்து நிறுத்தியபோது, அதில் பதுக்கியிருந்த ஒன்றரை டன் ரேசன் அரிசியும், கடத்தல் பேர்வழிகளும் சிக்கியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளத்திற்கு தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தப்பட்டு வருகின்றது. இதைத் தடுக்கும்வகையில் குமரி மாவட்டத்தில் இருந்து கேரளம் செல்லும் அனைத்துப் பாதைகளிலும் போலீஸார் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். ஆனாலும் விதவிதமான உத்திகளில் அரிசிக் கடத்தல் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
அந்த வகையில் ரேசன் அரிசிக் கடத்தலைத் தடுக்கும் வகையில் களியக்காவிளை சார்பு ஆய்வாளர் முத்துகுமரன், படந்தாலுமூடு சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக கேரளம் நோக்கி மினி டெம்போ ஒன்று வந்தது. அதில் ஏராளமான தேங்காய்கள் இருந்தது. தேங்காய் லோடு உடன் வந்த அந்த டெம்போவைப் பார்த்து போலீஸார் சந்தேகம் அடைந்தனர். டெம்போவைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் ஒன்றரை டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மினி டெம்போவைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், டெம்போவை ஓட்டிவந்த பேச்சிப்பாறையைச் சேர்ந்த டிரைவர் ராஜேஷைக் கைது செய்தனர். கடத்தல் அரிசியைக் உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாரிடமும், மினி டெம்போவை தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.