கலெக்டர் உத்தரவை மீறி விடிய, விடிய லாரிகளில் கடத்தப்படும் கனிமவளம்: வைரலாகும் வீடியோ

விழிபிதுங்கி நிற்கும் நெல்லை மாவட்ட மக்கள்
நள்ளிரவில் ராதாபுரம் பகுதியில் லாரிகளில் செல்லும் கனிமவளங்கள்
நள்ளிரவில் ராதாபுரம் பகுதியில் லாரிகளில் செல்லும் கனிமவளங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 54 குவாரிகளுக்கும் தடைவிதித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டிருந்தார். ஆனால் தடையையெல்லாம் மீறி இரவோடு, இரவாக கல்குவாரிகளில் இருந்து லாரிகள் கனிமவளங்களைக் கடத்திச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நெல்லை மாவட்டம், அடைமிதிப்பான்குளம் பகுதியில் தனியார் கல்குவாரி ஒன்று இயங்கி வந்தது. கடந்த மே 14-ம் தேதி இரவு இங்கு பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் நான்கு தொழிலாளர்கள் பலியானார்கள். இதையடுத்து மாவட்டத்தில் உள்ள 54 குவாரிகளையும் ஆய்வுசெய்து அறிக்கை தர நெல்லை ஆட்சியர் விஷ்ணு கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 53 கல் குவாரிகளில் விதிமீறல்கள் நடந்திருப்பது தெரியவந்தது. இதனால் அனைத்து குவாரிகளும் தடைசெய்யப்பட்டன. அளவுக்கு அதிகமாக கனிமவளங்களை வெட்டிக் கொள்ளையடித்த 35-க்கும் அதிகமான குவாரிகளுக்கு மொத்தமாக 300 கோடி ரூபாய் அபராதமும், 13 குவாரிகளின் விதிமீறலை மதிப்பிட்டு, அந்தக் குவாரிகள் செயல்பட ஏன் தடைவிதிக்கக் கூடாது என விளக்கம் கேட்டும் நோட்டீசும் அனுப்பியது மாவட்ட நிர்வாகம்.

குவாரி விபத்துச் சம்பவத்திற்குப் பின்பு கடந்த 63 நாள்களாக நெல்லைமாவட்டத்தில் குவாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தென் மாவட்டங்களில் கட்டுமானப் பொருள்களின் விலை உயர்ந்தாலும், இயற்கை வளங்களின் மித மிஞ்சிய சுரண்டல் கட்டுக்குள் வந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் குவாரிகள் செயல்பட தடை இருந்தாலும், இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் குவாரிகளை இயக்கி இப்போதும் டன் கணக்கில் கனிமவளங்களைக் கடத்திச் செல்வது தொடர்கிறது. ஆளுங்கட்சி புள்ளிகளோடு குவாரி அதிபர்களுக்கு இருக்கும் தொடர்பினால் காவல்துறையினரும் இதில் எதுவும் செய்ய முடியாமல் வேடிக்கைப் பார்ப்பதாக சமூக ஆர்வலர்கள் புலம்புகின்றனர்.

இதுமட்டும் இல்லாமல் ராதாபுரம் அருகே உள்ள ஒரு குவாரியில் இருந்து தடையை மீறி விடிய, விடிய லாரிகளில் குவாரியில் இருந்து கனிமங்களைக் கொண்டு செல்லும் காட்சி அந்தப் பகுதியில் உள்ள ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அந்தக் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in