
புதுச்சேரி மாநிலத்தில் பால் பற்றாக்குறை கடுமையாக நிலவுவதால் குழந்தைகள் பெரியவர்கள் உட்பட பொதுமக்கள் பால் இன்றி அவதிக்குள்ளாகி வரும் நிலையில் பால் பற்றாக்குறை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
பாண்லே நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு இடையே பால் கொள்முதல் செய்வதில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக கொள்முதல் செய்வதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக பாண்லே நிறுவனத்துக்கு கா்நாடகத்தில் இருந்து பால் கொள்முதல் செய்யப்படவில்லை. எனவே, பாண்லே பால் விநியோகத்தில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முகவா்களுக்கு வழக்கமாக விநியோகிக்கும் பாலின் அளவில் 50 சதவீதம் அளவுக்கே தற்போது வழங்கப்படுகிறது. அதனால் அவர்கள் பாலகங்களைத் திறந்த சிறிது நேரத்திலேயே பால் இருப்பு இல்லை என்று போர்டை மாட்டிவிட்டு மூடி விட்டு சென்று விடுகிறார்கள்.
பால் பற்றாக்குறையால் குழந்தைகள், மகளிா் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில், பாண்லே நிறுவனத்தை தனியாா் நிறுவனத்துக்கு அளிக்கப் போவதாகவும் பேச்சு அடிபடுகிறது. அதற்காகவே, பால் தட்டுப்பாட்டை திட்டமிட்டு உருவாக்குவது சரியல்ல. உடனடியாக பாண்லே நிா்வாகத்தில் உள்ள நிா்வாகச் சீா்கேடுகளைக் கலைந்து தட்டுப்பாடின்றி பால் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆா்.சிவா.
தங்களுக்கு உரிய அளவில் பால் பாக்கெட் வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து ஏஐடியுசி பாண்லே பால் விற்பனை தொழிலாளர் சங்கத்தினர் இன்று சட்டமன்றத்திற்கு முன்பாக போராட்டம் நடத்திய நிலையிலும் இதுவரை பால் பற்றாக்குறை போக்குவதற்கான நடவடிக்கைகள் எடுத்தபாடில்லை. இந்த நிலைமை தொடர்ந்தால் மக்களும் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலை உருவாகும் வாய்ப்புள்ளது.