
தமிழக அரசின் ஆவின் நிறுவனம் இன்று (16.09.2022) முதல் குளோப் ஜாமூன், ரசகுல்லா, பால்கோவா, பால்பேடா, மைசூர்பாக், பிரிமியம் மில்க் கேக் உள்ளிட்ட 7 வகையான ஆவின் இனிப்புகளுடைய விற்பனை விலையை வரலாறு காணாத வகையில் கிலோவிற்கு 80 ரூபாய் வரை உயர்த்தி அறிவித்துள்ளது. இதற்கு பால் முகவர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டுக்குப் பிறகு பால் கொள்முதல் விலையை சிறிதளவு கூட உயர்த்தாத நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மற்றும் 2022 நடப்பாண்டில் மார்ச், ஜூலை மாதங்களில் நெய், தயிர், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்களுக்கான விற்பனை விலையை ஆவின் நிறுவனம் வரலாறு காணாத வகையில் உயர்த்தியது.
இந்நிலையில் ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி ஆவின் நிறுவனத்தின் சார்பில் 200 கோடி ரூபாய்க்கு இனிப்புகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது குளோப் ஜாமூன், ரசகுல்லா, பால்கோவா, பால்பேடா, மைசூர்பாக், பிரிமியம் மில்க் கேக் உள்ளிட்ட 7 வகையான ஆவின் இனிப்புகளுடைய விலையை கிலோவிற்கு 80 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பால் முகவர்கள்கள், தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி கூறுகையில், "பால்கோவா, மைசூர்பாக் இனிப்புகளால் ஆவின் நிறுவனம் சுமார் சுமார் 200% லாபம் அடைந்து வரும் நிலையில் அதெல்லாம் போதாது என்று தற்போது அவற்றின் விற்பனை விலையை உயர்த்துவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். பால்கோவா ஒரு கிலோ அடக்க விலை அதிகபட்சமாக 190 ரூபாய் வரைதான் ஆகும். பால்கோவா இனிப்பிற்கு பெயர் போன ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரபல இனிப்புக்கடையின் விற்பனை விலையே ஒரு கிலோ 300 ரூபாய் எனும்போது ஆவினில் ஒரு கிலோ பால்கோவா 540 ரூபாய் என்பது பகல் கொள்ளையைவிட படுமோசமானதாகும்.
பால் கொள்முதல் விலையை உயர்த்தாமலேயே நடப்பாண்டில் மட்டும் கடந்த மார்ச் மற்றும் ஜூலை மாதங்களில் நெய், தயிர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கான விற்பனை விலையை உயர்த்திய நிலையில் தற்போது ஆவின் இனிப்புகளின் விற்பனை விலையையும் வரலாறு காணாத வகையில் உயர்த்துவதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளமுடியாது'' என்றார்.