நெல்லை மாவட்டம், களக்காடு ராணுவ பயிற்சி மையத்தில் படித்துவந்த வாலிபர் குளத்தில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், பள்ளிப்பட்டி மேச்சேரியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மகன் ரஞ்சித்குமார்(22). இவர் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகில் உள்ள வடுகச்சிமதிலில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயின்று வந்தார். இவர் தன் நண்பர்களுடன் நேற்று மாலை ஆலங்குளம், பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்கச் சென்றார். அப்போது ரஞ்சித்குமார் குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்றார். ஆனால் அவரால் ,மீண்டும் கரை திரும்ப முடியவில்லை. மெல்ல, மெல்ல மூழ்கத் தொடங்கினார். அவரோடு குளிக்கச் சென்ற அவரது நண்பர்கள் முயன்றும் மீட்க முடியவில்லை.
இதுகுறித்து ரஞ்சித்குமாரின் நண்பர்கள் நாங்குநேரி தீயணைப்புப்படை வீரர்களுக்குத் தகவல் கொடுத்தனர். தீயணைப்புப் படையினர் இன்று காலையில் ரஞ்சித்குமாரின் உடலை மீட்டனர். சேலத்தில் இருந்து வந்திருந்த ரஞ்சித் குமாரின் பெற்றோர் கதறி அழுத சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து திருக்குறுங்குடி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.