இந்தியாவில் முதன்முறையாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தொடங்க உள்ளது. இதற்காக கொல்கத்தாவில் இருந்து ஹவுரா பகுதி வரை ஹூக்ளி ஆற்றின் நீருக்கு அடியில் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவின் கிழக்கு-மேற்கு பகுதியை இணைக்கும் இந்த வழித்தடம் மொத்தம் 16 கி.மீ தூரம் கொண்டது. இந்தப் பாதை தண்ணீருக்கு அடியில் மட்டும் 4.8 கி.மீ சென்று, எஸ்ப்ளனேட் என்ற பகுதியை ஹவுரா மைதானத்தோடு இணைக்கிறது.
இந்த வழித்தடம் செயல்பாட்டிற்கு வந்தபிறகு ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இந்தப் பாதையில் செல்லும். இந்த சுரங்கப் பாதையில் வெற்றிகரமாக மெட்ரோ ரயில் சோதனை நடத்தப்பட்டது. அடுத்த மாத இறுதியில் எஸ்ப்ளனேட் - ஹவுரா மைதானம் இடையேயான வழித்தடத்தை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சோதனை செய்வார். அதன் பிறகே இந்தப் பாதையில் மெட்ரோ போக்குவரத்து தொடங்கும்.
ரயில் தண்டவாளங்கள் தண்ணீருக்கு அடியில் இருப்பதால் ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் சோதனை அவசியமாகும். டிசம்பர் மாத இறுதிக்குள் மெட்ரோ சேவை தொடங்கிவிடும் என கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் மேலாண்மை இயக்குனர் ஸ்ரீவத்ஸா தெரிவித்துள்ளார்.
நீருக்கு அடியில் அடித்தளம் அமைக்கும் பணி மிகவும் சிக்கல் நிறைந்தது. ஆனால் அந்த சிக்கல்களை சாதனையாக்கி இருக்கிறது கொல்கத்தா மெட்ரோ ரயில் நிர்வாகம். நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் தடம் அமைக்கப்படுவது இந்தியாவில் இதுவே முதல்முறை. சுரங்கப்பாதைகள் 120 ஆண்டுகள் சேவை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆற்றின் அடியில் செல்லும் சுரங்கப் பாதைகளில் ஒரு சொட்டு நீர் கூட நுழைய முடியாது. ஹுக்ளி ஆற்றில் அமைய உள்ள புதிய பாதை மூலம் தினசரி சுமார் 9 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.