8 லிட்டர் மெத்தனாலுக்கு 21 உயிர்கள் பலி எனில், எஞ்சிய 1,192 லிட்டர் மெத்தனால் எத்தனை உயிர்களுக்கு அச்சுறுத்தலாகி இருக்கும்?

தமிழகத்தில் பெரும் உயிர்ப்பலிகள் தடுப்பு!
மெத்தனால்
மெத்தனால்

செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளசாராயம் என்ற பெயரில் மெத்தனால் குடித்ததில் 21 நபர்கள் பலியான வழக்குகளை, கொலை வழக்குகளாக மாற்றி தமிழக காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், கள்ளச்சந்தையில் கிடைத்த 8 லிட்டர் மெத்தனால் அருந்தியதில் இதுவரை 21 உயிர்கள் பலியான சூழலில், எஞ்சிய 1,192 லிட்டர் மெத்தனாலை தமிழக காவல்துறை விரைந்து கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் பெரும் எண்ணிக்கையிலான உயிர்ப்பலிகளும் தவிர்க்கப்பட்டுள்ளன.

செங்கப்பட்டு மாவட்டம் சித்தாமூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம் ஆகிய ஊர்களில் கள்ளச்சாராயம் என்ற பெயரில் தொழிற்சாலை உபயோகத்துக்கான மெத்தானலை சிலர் விற்றுள்ளனர். இதனை வாங்கி போதைக்காக அருந்தியவர்களில், காவல்துறை கணக்குப்படி இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் கள்ளச்சாரய விற்பனை இருந்ததான கோணத்தில் காவல்துறையின் முதல்கட்ட விசாரணை தொடங்கியது. தனிப்படைகள் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்தோர் அருந்தியது கள்ளச்சாராயம் அல்ல, மெத்தனால் என்பது தெரிய வந்தது. தொழிற்சாலை உபயோகத்துக்காக ஆண்டுக்கணக்கில் தேங்கியிருந்த 1200 லிட்டர் மெத்தனாலை, கொரோனா காரணமாக தொழிற்சாலை முடங்கியதை அடுத்து, அதன் உரிமையாளர் கள்ளச்சந்தையில் அவற்றை விற்றதே அனைத்துக்கும் காரணமாக போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

மருத்துவமனையில் பரிசோதனை
மருத்துவமனையில் பரிசோதனை

திவாலான தொழிற்சாலையின் உரிமையாளர் இளையநம்பி, 1200 மெத்தனாலை சட்டவிரோதமாக புதுச்சேரியை சேர்ந்த 3 நபர்கள் வசம் விற்றுள்ளார். இந்த மெத்தனாலில் 8 லிட்டர், சிலர் வாயிலாக நீர்க்கச் செய்து எக்கியார்குப்பம் மற்றும் சித்தாமூர் பகுதிகளின் விற்பனை செய்யப்பட்டிருந்தது. இது போல வேறு சிலர் வசமும் சில்லறை விற்பனையாகவும், பெருமளவு மொத்த விற்பனையாகவும் மெத்தனால் கைமாறி இருக்கிறது.

எக்கியார்குப்பம், சித்தாமூர் உயிர்ப்பலிகளை அடுத்து ஆங்காங்கே மெத்தனால் வாங்கியவர்கள் அதனை பயன்பாட்டுக்கு விடாமால் தவிர்த்துள்ளனர். தனிப்படை போலீஸாரும் துரிதமாக செயல்பட்டு, பல்வேறு தரப்பினரிடமிருந்து 1,192 லிட்டர் மெத்தனாலை முடக்கி உள்ளனர்.

இதனையடுத்தே கள்ளச்சாராய உயிர்ப்பலிகள் தொடர்பான காவல்துறை வழக்குகள் தற்போது கொலை வழக்குகளாக மாற்றப்பட்டுள்ளன. தொழிற்சாலை உரிமையாளர் இளையநம்பி மற்றும் அவரிடம் மெத்தனால் வாங்கியவர்கள், இடையில் கைமாற்றியவர்கள் என 13 பேருக்கு எதிரான வழக்குகள் தற்போது கொலை வழக்குகளாக மாற்றப்பட்டுள்ளன.

மெத்தனால்
மெத்தனால்

கடைசி நேரத்தில் 1,192 லிட்டர் மெத்தனால் மீட்கப்பட்டுள்ளதால், பெரும் உயிர்ப்பலி சம்பவங்கள் தடுக்கப்பட்டுள்ளன. 8 லிட்டர் மெத்தனால் விற்பனைக்கே 21 உயிர்கள் பலியானதோடு பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூழலில், ஆயிரத்துக்கும் மேலான லிட்டர் மெத்தனால் சந்தையில் கள்ளச்சாராயம் என்ற பெயரில் பரவலாக கைமாறி இருப்பின், தமிழகத்தை உலுக்கும் பெரும் உயிராபத்துகளுக்கு காரணமாகி இருக்கும். தற்போது எஞ்சிய 1,192 லிட்டர் மெத்தனாலை கைப்பற்றியதுடன், தமிழகத்தின் பல்வேறு தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு உள்ள மெத்தனாலின் இருப்பு குறித்து சரிபார்க்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

செங்கை- விழுப்புரம் உயிர்ப்பலிகளின் பின்னணியில் மெத்தனால் விவகாரம் வெளிப்பட்ட போதும், தமிழகம் நெடுக மேற்கொள்ளப்பட்ட கள்ளச்சாராய விற்பனைக்கு எதிரான காவல்துறை நடவடிக்கைகளில் இது வரை 3,762 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in