அமித் ஷா மகனுக்கு மெஸ்ஸி ஜெர்ஸி!

அமித் ஷா மகனுக்கு மெஸ்ஸி ஜெர்ஸி!

நடந்து முடிந்த கத்தார் உலகக்கோப்பை கால்பந்து ஆட்டங்களில் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பினை பெற்ற அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி, இந்திய விஐபி ஒருவருக்கு அனுப்பிய பரிசு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

உலகக்கோப்பை கால்பந்து ஆட்டத்தின் இறுதிப்போட்டியில் பிரான்ஸை வென்று அர்ஜென்டினா சாதனை படைத்தது. இந்த சாதனைக்கு காரணமான அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவு வழங்கி வருகின்றனர். இறுதிப்போட்டி முடிந்து ஒரு வாரமாகும் சூழலிலும், ரசிகர்கள் மத்தியில் இன்னமும் கால்பந்து காய்ச்சல் தணியாது நீடிக்கிறது.

இந்நிலையில் இந்திய பிரபலம் ஒருவருக்கு மெஸ்ஸி அனுப்பி வைத்த பரிசு சமூக ஊடகங்களில் சிலாகிக்கப்பட்டு வருகிறது. அந்த பிரபலம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா. தொழிலதிபரான ஜெய் ஷா இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலராகவும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் உள்ளார்.

இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிரக்ஞான் ஓஜா, மெஸ்ஸி அளித்த ஜெர்ஸியை ஜெய் ஷா வசம் ஒப்படைத்தார். மெஸ்ஸி வழக்கமாக அணியும், அவர் பெயர் பொறித்த அர்ஜென்டினா அணிக்கான ’10’ என்ற இலக்கம் பொறித்த ஜெர்ஸியில், ’ஜெய் ஷாவுக்காக’ என்று கைப்பட எழுதி மெஸ்ஸி கையொப்பம் இட்டுள்ளார்.

மெஸ்ஸி ஜெர்ஸியை, ஜெய் ஷாவிட ஒப்படைக்கும் படத்தை, பிரக்ஞான் ஓஜா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in