சைரஸ் விபத்து மரணம்; சாலை விதிகளைப் பல முறை மீறிய கார்: புதிய தகவல்கள்

சைரஸ் விபத்து மரணம்; சாலை விதிகளைப் பல முறை மீறிய கார்: புதிய தகவல்கள்

டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் சமீபத்தில் உயிரிழந்தார். அவருடன் அந்தக் காரில் பயணம் செய்த இன்னொருவரும் விபத்தில் பலியானார். இந்நிலையில், அவர் பயணம் செய்த மெர்சிடிஸ் எஸ்.யூ.வி கார் இதற்கு முன்னர் பல முறை சாலை விதிகளை மீறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

செப்டம்பர் 4-ம் தேதி குஜராத்தின் உத்வாடா நகரிலிருந்து மகாராஷ்டிரத் தலைநகர் மும்பைக்கு, மெர்சிடிஸ் எஸ்.யூ.வி காரில் சைரஸ் மிஸ்திரியும் வேறு சிலரும் சென்றுகொண்டிருந்தனர். மும்பையின் சிறந்த மகப்பேறு மருத்துவரான அனாஹிதா பண்டோலே காரை ஓட்டி வந்தார். அவரது கணவர் டேரியஸ் பண்டோலே காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்தார். டேரியஸ் பண்டோலேயின் சகோதரர் ஜஹாங்கிர் பண்டோலேயும் சைரஸ் மிஸ்திரியும் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தனர்.

மதியம் 2.45 மணி அளவில் மகாராஷ்டிரத்தின் பால்கர் பகுதியில், சூர்யா நதியின் பாலத்தின் மீது கார் வேகமாகச் சென்றுகொண்டிருந்ததது. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையின் தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் சைரஸ் மிஸ்திரியும் ஜஹாங்கிர் பண்டோலேயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த அனாஹிதாவும் டேரியஸும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அதி வேகமாகச் சென்ற கார், மற்றொரு வாகனத்தை முந்த முயன்றபோது இந்த விபத்து நேர்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்தக் காரில் பயணம் செய்தபோது பின் சீட்டில் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்திரியும், ஜஹாங்கிர் பண்டோலேயும் சீட் பெல்ட் அணிந்திருக்கவில்லை என விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

காரில் பயணிக்கும்போது சீட் பெல்ட் போட்டிருந்தால்தான் ‘ஏர் பேக்’ வேலை செய்யும். எனினும், இந்தியாவைப் பொறுத்தவரை பின் சீட்டில் அமர்ந்து பயணிப்பவர்கள் சீட் பெல்ட் போடுவதை முறையாகக் கடைப்பிடிப்பதில்லை என்றே கூறப்படுகிறது. சீட் பெல்ட் போடாதது இந்த விபத்தில் சைரஸ் மிஸ்திரி உயிர் தப்புவதற்கான வாய்ப்பைத் தடுத்துவிட்டது என்றே கருதப்படுகிறது.

இந்நிலையில், அவர் பயணம் செய்த மெர்சிடிஸ் ஜிஎல்சி ரக எஸ்.யூ.வி கார், இதற்கு முன்னர் பல முறை சாலை விதிகளை மீறும் வகையில் இயக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

சிக்னலில் சிவப்பு விளக்கு சமிக்ஞையைப் பொருட்படுத்தாமல் செல்வது, அதிவேகத்தில் செல்வது என அந்தக் கார் இயக்கப்பட்டதாகத் தெரியவந்திருக்கிறது. அந்தத் தருணங்களில் அந்தக் காரை ஓட்டியது யார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in