‘என் கட்சியினரே ஏற்கவில்லை’ - மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்க வட இந்தியத் தலைவர்கள் விரும்பவில்லை என சரத் பவார் சாடல்!

‘என் கட்சியினரே ஏற்கவில்லை’ - மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்க வட இந்தியத் தலைவர்கள் விரும்பவில்லை என சரத் பவார் சாடல்!

மக்களவையிலும் சட்டமன்றங்களிலும் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்க துணை நிற்கும் மனநிலை வட இந்தியத் தலைவர்களிடம் இல்லை என மூத்த அரசியல் தலைவர் சரத் பவார் கூறியிருக்கிறார்.

மகாராஷ்டிர மாநிலம் புணேயில், அந்நகரத்தின் மருத்துவர்களின் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சரத் பவார் கலந்துகொண்டார். அவருடன் அவரது மகளும் மக்களவை உறுப்பினருமான சுப்ரியா சுலேவும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு இருவரும் பதிலளித்தனர்.

அதில், மக்களவையிலும் சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மசோதா குறித்த கேள்வி எழுந்தது. அந்த மசோதா இன்னும் நிறைவேற்றப்படாதது ஏன் எனும் கேள்விக்குப் பதிலளித்த சரத் பவார், “நாடாளுமன்றத்தின் மனநிலை, குறிப்பாக வட இந்தியத் தலைவர்களின் மனநிலை, இவ்விஷயத்தில் உறுதுணை செய்யும் வகையில் இல்லை. நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது நடந்ததை நினைவுகூர முடியும். அப்போது பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து நாடாளுமன்றத்தில் பேசியிருகிறேன். ஒருமுறை அப்படிப் பேசிவிட்டு திரும்பிப் பார்த்தபோது, என் கட்சி (காங்கிரஸ்) எம்.பி-க்களில் பலர் எழுந்து சென்றிருந்தது தெரியவந்தது. என் கட்சியினரால் கூட இவ்விஷயம் ஜீரணிக்க முடியாததாக இருந்தது” என்றார்.

மேலும், “நான் மகாராஷ்டிர முதல்வராக இருந்தபோது, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டுவந்தேன். ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தது. பின்னர் மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர்” என்று சரத் பவார் கூறினார். மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற அனைத்துக் கட்சிகளும் முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in