
புயல், மழையால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு உதவுவதற்கும், மீட்பு பணியில் ஈடுபடுவதற்கும் காவல் துறையினர் தயார் நிலையில் இருக்குமாறு அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'மாண்டஸ்' புயலாக வலுபெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில பேரிடர் மீட்பு படையினரின் 6 குழுக்கள் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கடலூர் நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் சென்னையில் மீட்பு பணியில் ஈடுபட தமிழக காவல்துறையைச் சேர்ந்த தேசிய நீச்சல் வீரர்கள் மற்றும் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தைச் சேர்ந்த நீச்சல் வீரர்களை கொண்ட 50 பேர் அணி மீட்பு பணி தளவாடங்களுடன் காவல்துறை தலைமையகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், கடலோர மாவட்டங்களில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் படகுகளுடன் மீட்பு பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், புயல், மழையால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு உதவுவதற்கும், மீட்பு பணியில் ஈடுபடுவதற்கும் காவல் துறையினர் தயார் நிலையில் இருக்கும்படி அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.