
மதுரை அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு கறி விருந்து பரிமாறப்பட்டது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே அனுப்பப்பட்டி கரும்பாறை முத்தையா கோயில் உள்ளது. இப்பகுதி மக்களுக்கு காவல் தெய்வமாக உள்ளது. இக்கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வெகுவிமர்சையாக நடத்தப்படுகிறது.
நடப்பாண்டு விழாவில் கரடிக்கடிக்கல், மாவளிபட்டி, சோழவந்தான், செக்கானூரணி உள்பட10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த வாலிபர்கள் முதல் முதியோர் வரை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சுவாமிக்கு 60-க்கும் மேற்பட்ட கிடா பலியிடப்பட்டு கறி சமைக்கப்பட்டது. அந்த உணவு படையலிட்டு கால தெய்வத்தை வழிபட்டனர். இதைத் தொடர்ந்துவிழாவில் பங்கேற்றவர்களுக்கு நீண்ட வரிசையில் வாழை இலை விரித்து சாதம், கறிக்குழம்பு பரிமாறப்பட்டது. விருந்து முடிந்ததும் ஆண்கள் அனைவரும் இலையை எடுக்காமல் திரும்பிச் சென்றனர். இலைகள் காய்ந்து, அப்பகுதியில் இருந்து கலைந்த பிறகே அப்பகுதிக்கு பெண்கள் செல்லும் சம்பிரதாயம் இன்றும் பின்பற்றப்படுகிறது