
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த 2021-ம் ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்த சம்பவத்தின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம் டிசம்பர் 8-ம் தேதி திறக்கப்பட உள்ளது.
இந்திய முப்படைகளின் தளபதியாக இருந்த பிபின் ராவத் கடந்த 2021-ம் ஆண்டு கோவையிலிருந்து நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு ஹெலிகாப்டர் ஒன்றில் சென்று கொண்டிருந்தார். அப்போது வானிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட குழப்பத்தில் ஹெலிகாப்டர் குன்னூர் அடுத்த காட்டேரி பூங்கா அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விமானியான கேப்டன் வருண் சிங் டிசம்பர் 15-ம் தேதி சிகிச்சைக்காக பெங்களூருவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது உயிரிழந்தார்.
இதையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்த 14 பேருக்கும் ஒவ்வொரு ஆண்டும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. வருகிற டிசம்பர் 8-ம் தேதி மூன்றாம்ஆண்டு அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விபத்து நடந்த இடத்தில் 14 பேரின் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய அதே இடத்தில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நினைவுச் சின்னத்தில், “ஆன்மா அழியாதது. எந்த ஆயுதத்தாலும் அதை துளைக்க முடியாது. எந்த நெருப்பாலும் அதை அழிக்க முடியாது. தண்ணீராலும் அதை ஈரப்படுத்த முடியாது. காற்றாலும் அதை உணர்த்த முடியாது” என்ற வாசகங்கள், தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 14 பேரின் பெயர்களும் இந்த நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
வருகிற டிசம்பர் 8-ம் தேதி இந்த நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விரைவில் ராணுவம் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து, நஞ்சப்பசத்திரம் கிராமத்திற்கு ராணுவம் மற்றும் விமானப்படை தரப்பில் தொடர்ந்து பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் விபத்து நடந்த பகுதியின் அருகிலுள்ள காட்டேரி பூங்காவை பிபின் ராவத் நினைவு பூங்கா என்று பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.