உருகும் பனிமலையால் வெளிப்பட்ட உண்மை; 37 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

உருகும் பனிமலை
உருகும் பனிமலை

சுவிட்சர்லாந்தின் உருகும் பனிமலையால், 37 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன ஜெர்மனிய மலையேற்ற வீரர், சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.

உருகும் பனிமலைகள் பூமிப் பந்தெங்கும் புதிய சவால்களை உருவாக்கி வருகின்றன. பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களினால், கடந்த 1,20,000 ஆண்டுகளில் இல்லாத வெப்பத்துக்கு மனிதர்கள் ஆளாகி உள்ளனர். வெப்ப அலைகள் பல்வேறு நாடுகளையும் அலைக்கழித்து வருகின்றன. இதன் மத்தியில், பனி தேசமான சுவிட்சர்லாந்தில் பழைய புதிர்கள் பலவும் வெளிப்பட்டு வருகின்றன.

இங்குள்ள பனிமலைகள் வெகுவாய் உருகத் தொடங்கியுள்ளன. இந்த நூற்றாண்டின் நிறைவில் உலகின் பனிமலைகளில் பாதி கரைந்திருக்கும் என்ற அறிவியலாளர்களின் கணிப்பை சுவிஸ் மலைகள் உறுதி செய்து வருகின்றன. இந்த இயற்கை சீர்கேடு காரணமாக மனித குலத்தின் அழிவு நெருங்கி வர, அழிந்து போன மனிதர்கள் பலரும் பனிமலைகளின் உள்ளிருந்து சடலமாக மீட்கப்படுவது அதிகரித்து வருகிறது.

பல தசாப்தங்களுக்கு முன்னதாக விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பனியில் புதைந்தவர்கள், அப்படியே உறைநிலையில் உருக்குலையாது சடலமாக மீட்கப்பட்டு வருகிறார்கள். புதிதாக மலையேற்றம் மேற்கொள்ளும் குழுவினர் மற்றும் அதற்கான அரசின் ஆய்வுகள் ஆகியவற்றில் இவை வெளிப்பட்டு வருகின்றன. இந்த வகையில், காணாது போன சிறுவிமானம், 2018-ல் மர்மமாக மறைந்து போன சுவிஸ் கோடீஸ்வரர் கார்ல் எரிவன் ஹாப் என்பவரது சடலம் உள்ளிட்டவை அண்மையில் மீட்கப்பட்டன. போலவே, 70களில் பனிப்புயலில் சிக்கி புதைந்து போன 2 ஜப்பானிய மலையேற்ற வீரர்களின் சடலங்கள், இதற்கு முன்னதாக மேட்டர்ஹார்ன் பனிமலையில் மீட்கப்பட்டுள்ளன.

மேட்டர்ஹார்ன் பனிமலையில் கண்டெடுக்கப்பட்ட ஜெர்மனிய மலையேற்ற வீரரின் உடமைகள்
மேட்டர்ஹார்ன் பனிமலையில் கண்டெடுக்கப்பட்ட ஜெர்மனிய மலையேற்ற வீரரின் உடமைகள்

இந்த வரிசையில், 1986-ம் ஆண்டில் காணாமல் போன 38 வயது ஜெர்மானிய மலையேற்ற வீரரின் சடலம், உருகத் தொடங்கிய மேட்டர்ஹார்ன் மலையின் பனிப்பாளங்கள் மத்தியில் வெளிப்பட்டிருக்கிறது. உறைபனி காரணமாக உடலின் பெரும்பகுதி உருக்குலையாது மீட்கப்பட்டதில், டிஎன்ஏ பரிசோதனை மூலம் சடலத்துக்கு உரிய நபர் அடையாளம் காணப்பட்டிருக்கிறார். ஜெர்மன் மலையேற்ற வீரர் இறந்ததன் பின்னணி குறித்த இதர தகவல்களை சுவிஸ் போலீஸார் இன்னமும் வெளியிடவில்லை; சடலத்தின் பனிக்காலணி உள்ளிட்ட ஒரு சிலவற்றின் புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in