பாஜக-வை சதாய்க்கும் சத்யபால் மாலிக்

ஒரு கவர்னரை சுற்றும் அரசியல் அக்கப்போர்கள்
சத்யபால் மாலிக்
சத்யபால் மாலிக்

மேகாலயா கவர்னராக பொறுப்பு வகிக்கும் சத்யபால் மாலிக் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து உதிர்த்து வரும் கருத்துக்கள் இந்திய அரசியலில் ஆச்சரிய கவனத்துக்கு ஆளாகி வருகின்றன. ஒரு கவர்னர் ஆளும்கட்சிக்கு எதிராக தொடர்ந்து பேசுவது எப்படி சாத்தியமாகிறது? யாரிந்த சத்யபால் மாலிக்? என்ற கேள்விகளும் அண்மை காலமாய் அதிகரித்துள்ளன.

சத்யபால் மாலிக்
சத்யபால் மாலிக்

அதிரடி கருத்துக்கள்

மாநிலங்களின் கவர்னராக பொறுப்பேற்பவர்கள் பெரும்பாலும் முன்னாள் அரசியல் தலைவராகவும், மத்தியில் அப்போது ஆளும் கட்சியின் செல்வாக்கு கொண்டவராகவுமே இருப்பார்கள். ராஜ்பவனில் நுழையும் முன்னர் தமது அரசியல் அடையாளங்களை வெளிப்பார்வைக்கு அழுத்தமாக துறந்து செல்வார்கள். மாட்சிமை தாங்கிய ஆளுநர் பதவிக்கான மரியாதையும், மரபும் அதுதான். ஆனால் முன்னாள் பாஜக பிரபலமான சத்யபால் மாலிக் தனது அரசியல்வாதி அடையாளத்தை விட்டுக்கொடுக்காது திறந்த மனதோடு தொடர்ந்து பொதுவெளியில் களமாடி வருகிறார்.

உதாரணத்துக்கு நேற்றைய(அக்.18) ராஜஸ்தான் பேட்டியில், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவான தனது நிலைப்பாட்டினை மற்றொமொரு முறை சத்யபால் அழுத்தமாய் பதிவு செய்தார். மேலும் ’விவசாயிகளின் குரலுக்கு பாஜக அரசு காதுகொடுக்காவிடில், வரும் 5 மாநில சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி வாய்ப்பை இழப்பார்கள்’ என்று அதிரடித்தார். இதனை நேற்று மட்டுமல்ல, கடந்த 6 மாதங்களாகவே அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். ’விவசாயிகள் தொடர் போராட்டம் தொடர்பாக மோடி மற்றும் அமித்ஷாவிடம் பேசி இருக்கிறேன். நல்ல தீர்வு விரைவில் எட்டப்படும் என நம்புகிறேன்’ என்பார். ஆனால் பாஜகவினர் வயிற்றில் அடுத்தடுத்து புளி கரைப்பார்.

விவசாயிகள் போராட்டம்- கோப்பு படம்
விவசாயிகள் போராட்டம்- கோப்பு படம்

விவசாயிகளுக்கு ஆதரவு

கவர்னர் பதவி வகிப்பவர்களின் பொதுவெளி நகர்வுகள் அனைத்துமே அதனை வகிப்பவர்களால் கவனத்துடம் கையாளப்படுவதே வழக்கம். ஆனால் தான் ஒரு முன்னாள் அரசியல்வாதி என்பதன் பாதிப்பு கவர்னர் சத்யபாலின் உரைகளிலும் ஒட்டிக்கொண்டிருக்கும். மேகாலயா என்றில்லை, இதற்கு முன்னர் பீகார், ஒடிசா, கோவா, ஜம்மு காஷ்மீர் என இதர மாநிலங்களில் கவர்னராக இருந்தபோதும் வெளிப்படையாக பேசி சர்ச்சையை கூட்டி இருக்கிறார். அதே வேளை விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து குரல் கொடுத்தும் வருகிறார்.

காஷ்மீரில் பொறுப்பு வகித்தபோது தீவிரவாதிகளின் மிரட்டலால் தங்களது விளைபொருட்களை விற்கமுடியாது விவசாயிகள் கலக்கம் கொண்டிருந்தனர். அவர்களின் உகவலையை போக்க மத்திய அரசே காஷ்மீர் ஆப்பிள்களை மொத்தமாய் கொள்முதல் செய்ய சத்யபால் ஏற்பாடு செய்தார். ஆனால் அதே காஷ்மீரை தொட்டு சத்யபால் நேற்று பேசியது பாஜகவினருக்கும் மத்திய அரசுக்கும் சங்கடமூட்டக் கூடியது. ‘நான் காஷ்மீர் கவர்னராக இருந்தபோது ஸ்ரீநகரைச் சுற்றி 50 கிமீ-க்கு தீவிரவாதிகள் எட்டிக்கூட பார்க்க மாட்டார்கள். இன்றோ சர்வ சாதாரணமாக பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள்’ என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.

மோடியுடன் மாலிக்
மோடியுடன் மாலிக்

மாலிக்கின் அரண்கள்

இப்படி மாலிக்கின் வெளிப்படையான பேச்சு பாஜகவினரை வெறுப்பேற்றினாலும், எதிர் கருத்து பகிராது அமைதி காக்கிறார்கள். அதிகபட்ச நடவடிக்கையாக அவரை வேறு மாநிலத்துக்கு மாற்றுவார்கள். அப்படி இதுவரை தொடர்ந்தார்ப்போல ஒரு வருட சொச்சத்துக்கு மேல் எந்த மாநிலத்திலும் கவர்னர் பொறுப்பில் அவர் நீடித்தது கிடையாது. மேகாலயாவில் அந்த எல்லையை தற்போதுதான் தொட்டிருக்கிறார்.

பாஜகவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவராக இருந்ததும், உத்திரபிரதேச அரசியலில் முக்கிய சமூகமான ஜாட் பிரிவை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு தற்போது பெருகியிருக்கும் விவசாயிகள் ஆதரவும் சத்யபாலுக்கு அரணாக காத்திருக்கின்றன. மேலும் கவர்னர் பதவியில் இருப்பதாலே அவர் அடக்கி வாசிக்கிறார்; அல்லாவிடில் இன்னொரு சுப்பிரமணிய சுவாமி ஆகிவிடுவார் என்ற அச்சமும் பாஜகவுக்கு உண்டு. அந்தளவுக்கு ஐம்பதாண்டு அரசியலில் ஆழம் கண்டவர் சத்யபால்.

காஷ்மீர் கவர்னராக சத்யபால் மாலிக்
காஷ்மீர் கவர்னராக சத்யபால் மாலிக்

ஐம்பதாண்டு அரசியல் ஆழம்

எழுபதுகளில் மீரட் பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர் மாலிக். சரண்சிங்கின் பார்வை பட்டு உ.பி சட்டமன்ற உறுப்பினரானார். அதன் பின் காங்கிரஸ் பக்கம் போனவர் ராஜிவ் காந்தி காலத்தில் அருண் நேருவுடன் இணக்கமானார். அதன் உபயமாக ராஜ்ய சபா எம்பியானார். காங்கிரசை விட்டு விலகிய வி.பி.சிங், ஜன் மோர்ச்சா மற்றும் ஜனதா தளம் என பயணித்தபோது அவருடன் தொடர்ந்த அருண்நேருவுடன் சத்யபால் மாலிக்கும் ஒட்டிக்கொண்டார். அலிகார் எம்பியாக அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்து பிரபலமானார். ஆனால் பெரிதாய் சோபிக்க முடியாததில், காங்கிரஸின் எதிர்முகமாக வளர்ந்து வந்த பாஜகவில் சங்கமித்தார். மாலிக் போலவே வெளிப்படையாக பேசும் பழக்கமுள்ள நிதின் கட்காரி அக்கட்சியின் தலைவரான பிறகே கூடுதல் கவனம் பெற்றார். அந்த வகையில் கட்சியின் சீனியர் தலைவர்கள் கவர்னராவதன் வரிசையில் சத்யபால் மாலிக்கும் பீகார் கவர்னரானாக தனது ராஜ்பவன் இன்னிங்ஸை தொடங்கினார்.

சத்யபால் மாலிக்
சத்யபால் மாலிக்

’பி டீம்’ விமர்சனம்

சத்யபால் அதிகம் பேசுவதை வைத்து அவரை சுலபமாக எடைபோட முடியாது. அவர் பீகார் கவர்னரானபோது ’மோடி தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பிரதமராக இருப்பார். அதுவரை நானும் கவர்னராக தொடர்வேன்’ என்று அழுத்தமாக சொல்லியிருந்தார். அதேபோல அவரளவுக்கு பாஜக தலைமையுடன் எளிதில் தொடர்புகொள்பவர்கள் குறைவு. சத்யபால் மாலிக்கின் விவசாய அபிமானத்தை முன்னிறுத்தி, அவர்களுக்கு ஆதரவு லாவணி சேர்ப்பது போல பாஜகவின் பி டீம் ஆக செயல்படுகிறவர் என விமர்சிப்பவர்களும் உண்டு. ஆனபோதும் ஒரு பரபரப்பான அரசியல்வாதிக்கு நிகராக காரம் குறையாத கருத்துக்களோடு களமாடி வருகிறார் கவர்னர் சத்யபால் மாலிக்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in