அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி ஒரு லட்சம் பேரிடம் மெகா மோசடி: வெளிநாட்டு நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்கு

அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி ஒரு லட்சம் பேரிடம் மெகா மோசடி: வெளிநாட்டு நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்கு

அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்கள் சுமார் 1 லட்சம் பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த ஹிஜாவு நிறுவன உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்து மோசடி செய்த நிறுவனங்கள் மீது பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம், இண்டர்நேஷ்னல் பைனான்சியல் சர்வீஸ், எல்வின் நிறுவனம் முதலான நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாகக் கூறி ஆயிரக்கணக்கானோரை ஏமாற்றி மோசடி செய்ததாக பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து ஹிஜாவு என்ற மலேசிய நிறுவனம் சுமார் ஒரு லட்சம் பேரிடம் கோடிக்கணக்கான ரூபாயை அதிக வட்டி தருவதாகப் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை வட்டி தருவதாகக் கூறி இந்த நிறுவனம் மோசடியில் ஈடுபட்டு ஏமாற்றியதாக கடந்த நவம்பர் 3-ம் தேதி நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் ஹிஜாவு என்ற மலேசிய நிறுவனம் மீது புகார்கள் குவிந்து வரும் நிலையில் ஹிஜாவு நிறுவனத்தின் மீது பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் இந்த ஹிஜாவு நிறுவனம் (www.mypayhm.com) இணையதளம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உறுப்பினர் எண் கொடுத்து, ஆன்லைன் மூலமாக வாடிக்கையாளர்களையும், அவர்கள் கணக்குகளையும் கையாண்டு வந்தது தெரியவந்தது.

மேலும், குறிப்பட்ட இணையதளத்தின் மூலம் எவ்வளவு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது? மாதம் எவ்வளவு வட்டி வருகிறது உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் என்ற அடிப்படையிலும் நம்பிக்கையின் பேரில் பெரும்பாலானோர் இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் எண்ணெய்க் கிணறுகள் வைத்திருப்பதாகவும், அதில் வரும் லாபத்தை முதலீடு செய்து இந்தத் தொழிலில் லாபம் பெறுவதாகக் கூறி பொதுமக்களை இந்நிறுவனத்தினர் ஏமாற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஹிஜாவு குழுமத்தின் தலைவர் சௌந்திரராஜன், நிர்வாக இயக்குநர் அலெக்ஸாண்டர் மற்றும் நிர்வாகிகள் மீது பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in