மருந்து விற்பனை பிரதிநிதிகள் இன்று வேலைநிறுத்தம்!

கரோனா மருந்து, உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி விலக்களிக்க கோரிக்கை
மருந்து விற்பனை பிரதிநிதிகள் இன்று வேலைநிறுத்தம்!

நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நடக்கும் இந்த வேலை நிறுத்தம் பற்றி அகில இந்திய மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் ஆர்.ரமேஷ் சுந்தரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

"கோவிட் நோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், தடுப்பூசிகள் போன்றவற்றுக்கு ஆரம்ப காலத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டதும், இதனால் அவை கள்ளச்சந்தையில் விற்கப்பட்டதையும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். இதற்கான உண்மைக் காரணம், இந்திய காப்புரிமைச் சட்டத்தில் தெளிவான விதிமுறைகள் இருந்தும், இந்திய அரசாங்கம் தற்போதுள்ள சில கோவிட்-19 மருந்துகள் (உதாரணம் - ரெம்டெசிவிர்), தடுப்பூசிகள் (கோவாக்சின், கோவிஷீல்ட்) போன்றவற்றின் காப்புரிமையை ரத்துசெய்து, இந்த மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. உலகில் தடுப்பூசி உற்பத்தியில் முன்னணியில் உள்ள நமது பொதுத்துறை நிறுவனங்களை இதற்கு பயன்படுத்தவோ, அல்லது உள்நாட்டுத் தனியார் நிறுவனங்களுக்கு அந்த தயாரிப்பு உரிமத்தை வழங்கவோ இல்லை. இதே நிலைதான் காசநோய் போன்ற பிற கொடிய நோய்களுக்கான மருந்து விஷயத்திலும் நடக்கிறது.

ஏகபோகங்களின் லாபத்தை விட மக்கள் நலனே முக்கியம். வெளி நாட்டு படையெடுப்பில் இருந்து மட்டுமின்றி, உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நோய்களில் இருந்தும் குடிமக்களின் உயிரைப் பாதுகாக்கும் பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உள்ளது. மருந்து மற்றும் மருத்துவ சாதனங்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழுவிலக்கு அளிக்கப்பட வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை சுகாதாரத்துறைக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அத்தியாவசிய மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் உற்பத்திக்காக அனைத்து பொதுத்துறை மருந்து மற்றும் தடுப்பூசி நிறுவனங்களின் மறுமலர்ச்சி ஏற்பட போதுமான நிதிஒதுக்கீடு செய்யப்பட வேண்டும், விலைக் கட்டுப்பாடு மூலம் மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் விலைகளைக் குறைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

அதேபோல, தொழிலாளர்களை மேலும் அடிமைப்படுத்தும் நோக்கத்தோடு 44 தொழிலாளர் நலச்சட்டங்கள் நீக்கப்பட்டு, 4 தொழிலாளர் குறியீடுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவை முழுக்க முழுக்க நிர்வாகங்கள் நலன் சார்ந்தவை. இதில் மருந்து விற்பனை பிரதிநிதிகளின் நலனுக்கு பிரத்தியேகமாக இருந்த ‘விற்பனை அபிவிருத்தி பணியாளர் சட்டம், 1976-ம் அடங்கும். ஆகவே, நான்கு சர்ச்சைக்குரிய தொழிலாளர் குறியீடுகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம்.

இந்தப் போராட்டம் நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பெரு, சிறுநகரங்களில் நடைபெறுகிறது. மக்கள் நலனையும் உள்ளடக்கியது என்பதால், இந்த வேலைநிறுத்தம் வெற்றி அடைய அனைத்து பகுதி மக்களின் ஆதரவை நாடுகிறோம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in