பெண் மருத்துவருக்கு ஆபாச குறுஞ்செய்தி: மருந்து விற்பனையாளர் கைது

பெண் மருத்துவருக்கு ஆபாச குறுஞ்செய்தி: மருந்து விற்பனையாளர் கைது

காதல் என்ற பெயரில் பெண் மருத்துவருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் மகள், அதே பகுதியில் அழகு மற்றும் முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை கிளினிக் நடத்தி வருகிறார். இந்த மருத்துவர் நேற்று முன்தினம் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில் பெண் மருத்துவர் இவ்வாறு தெரிவித்து இருந்தார்:

‘கடந்த மாதம் 20-ம் தேதியன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர், எனது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினார். மேலும் ஆபாசமாக பேசியும் தொந்தரவு அளித்தார். எனவே அவரது எண்ணை பிளாக் செய்துவிட்டேன். ஆனால் அந்த நபர் வேறொரு எண்ணில் இருந்து தொடர்ந்து மீண்டும் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு அளித்து வருகிறார். எனவே ஆபாச தொல்லை அளிக்கும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ -இவ்வாறு தனது புகாரில் பெண் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவரின் புகாரின் பேரில், அடையாளம் தெரியாத நபர் மீது ஆபாசமான குறுஞ்செய்தி அனுப்புதல், ஐடி பிரிவு உள்ளிட்டவற்றின் கீழ் வழக்குபதிவு செய்து, மைலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும் சைபர்கிரைம் போலீஸார் உதவியுடன் அவரது செல்போன் எண்ணை வைத்தும்  விசாரணை மேற்கொண்டனர். இதில் பெண் மருத்துவருக்கு ஆபாசமான குறுஞ்செய்தி அனுப்பிய நபர், பம்மலை சேர்ந்த பன்னீர் செல்வம்(38) என்பது தெரியவந்தது. பின்னர் பன்னீர் செல்வத்தை கைது செய்து போலீஸார் விசாரணையை தொடர்ந்தனர்.

இதில் சேலம் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட பன்னீர் செல்வம் திருமணமாகி பம்மலில் குடும்பத்துடன் வசித்து வருவதும், பல வருடங்களாக மருந்து நிறுவனம் ஒன்றின் பிரதிநிதியாக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. மேலும் 5 வருடங்களாக பெண் மருத்துவரின் கிளினிக்கிற்கு பன்னீர் செல்வம் மருந்து சப்ளை செய்து வருவதும் தெரிய வந்தது. பெண் மருத்துவர் மீதான காதல் காரணமாக அவரது செல்போன் எண்ணுக்கு சில புகைப்படங்கள் மற்றும் ஆபாசமாக குறுஞ்செய்திகள் அனுப்பியதாக பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட பன்னீர் செல்வத்தை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in