
’’சர்க்கரை வியாதி காரணமாக என்னால் நடக்க முடியவில்லை என்னை எல்லாரும் கைவிட்டுவிட்டார்கள் மருத்துவ உதவி வேண்டும் சார்’’ என பிரபல சினிமா தயாரிப்பாளர் வி.ஏ.துரை கண்ணீர் மல்க நடிகர் ரஜினிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்
பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா இணைந்து நடித்த ’’பிதாமகன்’’ படத்தை தயாரித்தவர், எவர் கிரின் மூவிஸ் விஏ துரை. இவர் சத்தியராஜ் நடித்த ’’என்னம்மா கண்ணு’’, விஜயகாந்த் நடிப்பில் ’’கஜேந்திரா’’, ரஜினி தயாரித்த ’’பாபா’’ படத்தின் தயாரிப்பு நிர்வாகி என ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர்.
தயாரிப்பாளர் வி ஏ துரை, விஜய்காந்த்தை வைத்து ’’கஜேந்திரா’’ என்ற படத்தை தயாரித்திருந்தார். 2004ம் ஆண்டு வெளியான இந்த படத்தில், சீதா, சரத்குமார், ராதா ரவி, வினுசக்கரவர்த்தி என ஏராளமானோர் நடித்திருந்தனர். பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது.
கஜேந்திரா படத்தால் கடனாளியானதால், புதிதாக படம் தயாரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார் விஏ துரை. கடந்த பத்து வருடமாக மனைவி மற்றும் தனது ஒரே மகளை பிரிந்து, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், பொருட்களை இழந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது நண்பர் ஒருவரின் வீட்டில் வாழ்வாதாரத்தை இழந்து வசித்து வருகிறார்.
நடக்கவே முடியாத சூழலில் இருக்கும் தனக்கு உதவுமாறு நடிகர் ரஜினிகாந்திற்கு கோரிக்கை விடுத்துள்ள வி ஏ துரையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ‘’ ரஜினி சார் நான் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் உள்ளேன். எல்லோரும் கைவிட்ட நிலையில் உங்கள் உதவியை கேட்கிறேன். மருந்து வாங்கக் கூட பணம் இல்லை, அதனால் ஏதாவது எனக்கு உதவி செய்யுங்கள்’’ என கண்ணீர் மல்க வி.ஏ.துரை கோரிக்கை விடுத்துள்ளார்.
தயாரிப்பாளர் வி.ஏ.துரையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கெனவே அவருக்கு நடிகர் சூர்யா 2 லட்சம் ரூபாய் கொடுத்து உதவியது குறிப்பிடத்தக்கது.