மின்னணு முறையில் மருத்துவ கவுன்சில் தேர்தல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மின்னணு முறையில் மருத்துவ கவுன்சில் தேர்தல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை ஒரு முறை பயன்படுத்தும் பாஸ்வேர்டு மூலம் மின்னணு முறையில் நடத்தக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு, மருத்துவ கவுன்சில், தேசிய மருத்துவ ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் டிசம்பர் 19-ம் தேதி தபால் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் இத்தேர்தலை ஒரு முறை பயன்படுத்தும் பாஸ்வேர்டு மூலம் மின்னணு முறையில் நடத்த உத்தரவிடக் கோரி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் கார்த்திகேயன்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், சுதந்திரத்துக்கு முன்பிருந்தே பின்பற்றப்பட்டு வந்த தபால் வாக்கு நடைமுறையை, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகும் பின்பற்ற எந்த காரணமும் இல்லை என்றும், தபால் வாக்கு என்பது முறைகேடுகளுக்கு வழி வகுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2020-ம் ஆண்டு மின்னணு பதிவு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், ஒருமுறை மட்டும் பாஸ்வேர்டு மூலம் மின்னணு முறையில் வாக்குப்பதிவு செய்யும் நடைமுறையை கொண்டு வர முடியும் எனவும், இதன் மூலம் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த முடியும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், தமிழக அரசு, மருத்துவ கவுன்சில், தேசிய மருத்துவ ஆணையம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டார். மருத்துவ கவுன்சில் தேர்தல் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்து, இந்த வழக்கின் விசாரணையையும் டிசம்பர் 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in