
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வுக்கு படித்து வந்த பீகாரைச் சேர்ந்த 18 வயது மாணவி இன்று தனது விடுதி அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த இரண்டரை மாதங்களில் கோட்டாவில் நடந்த ஐந்தாவது தற்கொலை சம்பவம் இதுவாகும்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் பீகாரில் உள்ள மேற்கு சம்பரானில் இருந்து கோட்டாவுக்கு வந்த மாணவி செம்புல் பர்வீன், நீட் தேர்வுக்கான பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படித்து வந்தார். அந்த இளம்பெண்ணின் பெற்றோர் கடந்த இரண்டு நாட்களாக கோட்டாவில் இருந்தனர். விடுதியில் வழங்கப்படும் உணவு குறித்து மாணவி புகார் தெரிவித்ததால், அவரை புதிய விடுதியில் சேர்ப்பதாக அவர்கள் கூறினர். இந்த நிலையில், பெற்றோர் காலையில் வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, விடுதி அறையில் தங்கள் மகள் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அவரது அறையில் இருந்து தற்கொலைக் குறிப்பு எதுவும் மீட்கப்படாததால், இந்த தீவிர நடவடிக்கைக்கான காரணத்தை போலீஸார் இன்னும் கண்டறியவில்லை, இருப்பினும் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் தங்கள் மகள் வருத்தப்பட்டதாக அவரது பெற்றோர் கூறினர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தாரிடம் மாணவியின் உடல் ஒப்படைக்கப்பட்டது. கடந்த இரண்டரை மாதங்களில் கோட்டாவில் நடந்த ஐந்தாவது சம்பவம் இது என்று தாதாபரி வட்ட ஆய்வாளர் ராஜேஷ் பதக் கூறினார். 2022ல் கோட்டா நகரில் நீட் தேர்வுக்கு பயின்றவர்கள் உட்பட 15 பயிற்சி நிறுவன மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். கோட்டா நகரம் என்பது நுழைவுத் தேர்வு பயிற்சிக்கான முக்கிய நகரமாக உள்ளது.