
தன்னுடைய சொந்த மகளைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலைமிரட்டல் விடுத்த தந்தைக்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான ஏ.சி.மெக்கானிக். மனைவியைப் பிரிந்து வாழும் இவர், தன் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். குடிப்பழக்கம் உடைய அவர், 2019-ல் வீட்டில் இருந்த 11 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த, வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீஸார், மகளை பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியின் தந்தையைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலெட்சுமி முன் நடந்து வந்தது. போலீஸார் தரப்பில் அரசு சிறப்பு வழக்குரைஞர் டி.ஜி.கவிதா ஆஜரானார். இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த பின் நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.
அவரது தீர்ப்பில், " குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளன. எனவே, கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்கு, மூன்று ஆண்டுகளும், போக்சோ சட்டத்தில் ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, ஐந்து லட்சம் ரூபாயை இழப்பீடாக, தமிழக அரசு வழங்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.