எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். தரவரிசைப் பட்டியல் வெளியீடு: அக்டோபர் 19-ல் கலந்தாய்வு தொடக்கம்!

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். தரவரிசைப் பட்டியல் வெளியீடு: அக்டோபர் 19-ல் கலந்தாய்வு தொடக்கம்!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். வரும் 19-ம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் கடந்த மாதம் 22-ம் தேதி முதல் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது. கடந்த 3-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. 36,100 பேர் விண்ணப்பித்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22,643 பேரும், தனியார் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 13,457 பேரும் விண்ணப்பித்துள்ளனர். அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 7.5 சதவீதம இடஒதுக்கீட்டில் 558 பேருக்கு இடம் கிடைக்க உள்ளது.

இந்நிலையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் 22-10-2022 முதல் வரவேற்கப்பட்டு 6.10.2022 வரை விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. மொத்தமாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் 22,736. இதில் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டில் 2,695 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

மேற்படி விண்ணப்பங்களில் விளையாட்டு பிரிவுக்கு என பெறப்பட்ட விண்ணப்பங்கள் 216. அந்த 216 விண்ணப்பங்களை விளையாட்டுத்துறையினரோடு ஆலோசனை செய்து அவர்களோடு இணைந்து இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டது. மேலும் முன்னாள் ராணுவ வீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு பெறப்பட்ட 306 விண்ணப்பங்களை முன்னாள் ராணுவ வீரர் துறையின் பரிசீலனையோடு தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்கள் தமிழகத்தை பொருத்தவரை 6,067. இதில் அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் மொத்த இடங்கள் 1,380. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்கள் எம்பிபிஎஸ்-க்கு 454. 7.5% இட ஒதுக்கீட்டிற்கான அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்கள் 104. ஆக 7.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மொத்த இடங்கள் 558.

இன்று தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி யார் யாருக்கு எந்தெந்த கல்லூரி என்கிற இடங்களை உறுதி செய்யவும் இறுதிச் செய்யவுமான கலந்தாய்வு நிகழ்ச்சி 19.10.2022 அன்று தொடங்குகிறது. கலந்தாய்வில் முதல் நாளான 19-ம் தேதி ராணுவம் மற்றும் விளையாட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. 30-ம் தேதி மாணவர்கள் சேர்கையின் முதல் சுற்று முடிவுகள் அறிவிக்கப்படும். அதில் தகுதி பெற்றவர்கள் நவம்பர் 4-ம் தேதி கல்லூரிகளில் சேர வேண்டும். மேலும், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மாணவர்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் நவம்பர் 15-ம் தேதி தொடங்கும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in