கொட்டித் தீர்த்த மழை: நள்ளிரவில் களமிறங்கிய சென்னை மேயர், ஆணையர்

கொட்டித் தீர்த்த மழை: நள்ளிரவில் களமிறங்கிய சென்னை மேயர், ஆணையர்

சென்னை மேயர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நள்ளிரவில் மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கையை எடுத்தனர். கடந்த ஆண்டு தேங்கிய சாலையில் தற்போது தண்ணீர் தேங்கவில்லை என்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

மழை என்றாலே சென்னை மக்களுக்கு ஒரு வகையான பீதி தொற்றிக் கொள்ளும். அந்த பீதிக்கு காரணம் கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் மூழ்கடித்த செம்பரம்பாக்கம் ஏரி நீர் தான். அதோடு சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும். வீடுகள் பல இடங்களில் மூழ்கிய நிலையில் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் நிலை ஏற்பட்டு வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் மழை நீர் தேங்காத தி.நகர் உள்ளிட முக்கிய இடங்களில் மழை நீர் மழைநீர் தேங்கி பல இன்னல்களை மக்கள் சந்தித்தனர். இதற்கு காரணம் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தான் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதனிடையே ஆட்சி மாற்றத்துக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டார். அதன் விளைவாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடிகால் கால்வாய் அமைக்கும் பணியை தீவிரப்படுத்தினார். தற்போது பணிகள் முடியும் தருவாயில் திட்டம் இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று 10 சென்டிமீட்டருக்கு மேல் மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பல பகுதிகளில் மழை நீரை காணவில்லை. அந்த அளவுக்கு வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் நேற்று நள்ளிரவு சென்னையில் களமிறங்கினர். மேயர் பிரியா பெரியமேடு, ஜி.பி.ரோடு, அண்ணாசாலை, பூக்கடை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேங்கிய மழை நீரை உடனடியாக வெளியேற்றும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது செய்தியாளரிடம் பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, "கடந்தாண்டு மழை நீர் தேங்கிய இடத்தில் மழை நீர் தேங்கவில்லை. சாலையில் மழை நீர் தேங்காதபடி உடனடியாக வடிந்து சென்றுள்ளது. இதுதான் சென்னை மாநகராட்சியின் ரிசல்ட். அந்த அளவுக்கு மழை நீர் வடிகால்வாய் பணிகள் நன்றாக நடந்து கொண்டு இருக்கிறது. ஒரு சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அந்த இடத்திலிருந்து மழை நீரை வெளியேற்ற தேவையான மோட்டார் பம்புகளை வைத்துள்ளோம்" என்றார்.

இதேபோல் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி புளியந்தோப்பு, வியாசர்பாடி, கொளத்தூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். மாநகராட்சி ஆணையர் கூறுகையில், "புளியந்தோப்பு பகுதியில் எப்போது மழை பெய்தாலும் இந்த பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கும். ஆனால் தற்போது அங்கு தண்ணீர் தேங்கி நிற்கவில்லை. வடிகால் கால்வாய் மூலம் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இன்னும் அதிக மழை பெய்தால் நீர் சாலையில் நிற்காது என்று நாங்கள் நம்புகிறோம். தியாகராய நகர், மாம்பலம் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை. இருந்தாலும் மிக கனமழை பெய்தால் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கத்தான் செய்யும். ஆனாலும் அந்த மழைநீர் தேங்காத வகையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in