அபயாம்பிகையின் 50-வது ஆண்டு விழா: அமர்க்களமாய் அரங்கேறியது!

அபயாம்பிகையின் 50-வது ஆண்டு விழா: அமர்க்களமாய் அரங்கேறியது!

மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் உள்ள அபயாம்பிகை யானை, ஆலயத்திற்கு வருகை தந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு சீர்வரிசை, அபிஷேகம், புத்தாடைகள் என அமர்க்களமாய் விழா கொண்டாடியிருக்கின்றனர் மயிலாடுதுறை மக்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் ஆலயம் தேவாரப் பாடல் பெற்றது. சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான இந்த ஆலயத்திற்கு 1972-ம் ஆண்டு மூன்று வயது குட்டியாக அபயாம்பிகை யானை அழைத்து வரப்பட்டது. மூன்று தலைமுறைகளாக பாகன்கள் யானையை சிறந்த முறையில் பராமரித்து வருகின்றனர். 

தனது அன்பான, அமைதியான நடத்தையால் மயிலாடுதுறை மக்களின் செல்லப்பிள்ளையாக மாறியிருக்கிறது. இந்த  யானை மயிலாடுதுறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை பொதுமக்களும் யானை ரசிகர்களும் இன்று பொன்விழாவாக கொண்டாடினர். யானையின் மேல் புனித நீர் கொண்டு வரப்பட்டு, யாகசாலை அமைத்து அதில் புனித நீர் கடங்களில் வைத்து பூஜிக்கப்பட்டது.  

அபயாம்பிகை யானையுடன் திருவாவடுதுறை ஆதீனம்
அபயாம்பிகை யானையுடன் திருவாவடுதுறை ஆதீனம்

இரண்டு கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு, யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு யானை அபயாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.  காலில் கொலுசு, கழுத்தில் அடையாள சங்கிலி மற்றும் டாலர் அணிவிக்கப்பட்டது. முகபடாம் மற்றும் புத்தாடைகளுடன் யானை அழகுற காட்சியளித்தது. 

தொடர்ந்து கரும்பு, அச்சு வெல்லம், பொரிகடலை, பழ வகைகள், கிழங்கு வகைகள், இனிப்புகள் மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் மேளதாளங்கள் முழங்க சீர்வரிசையாக எடுத்து வந்து  யானைக்கு வழங்கினர்.

நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், நகர்மன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் யானையுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருவாவடுதுறை ஆதீனம், "காடுகளில் உள்ள யானைகள் உணவு இல்லாமல் நகரங்களில் உள்ள வீடுகளில் புகுந்து சேதப்படுத்துகிறது.  திருக்கோயில்களை கட்டி வைத்து அரசர்கள் கோயிலுக்கு யானைகளை கொடுத்துள்ளனர். அதுபோல் தமிழக அரசும் அனைத்து கோயில்களுக்கும் யானைகளை வழங்கி பாதுகாக்க வேண்டும்" என்று திருவாவடுதுறை ஆதினம் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in