கஞ்சா தாராளம், குட்கா அமோகம்: அதிரடி சோதனையில் கடைகளுக்கு சீல்

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களுடன் போலீஸார்
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களுடன் போலீஸார்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் சோதனை நடத்தப்பட்டு  30 கடைகளுக்கு மேல் சீல் வைக்கப்பட்டு பல லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா மிக எளிதாக கிடைப்பதாகவும்,  பள்ளி மாணவர்களே கஞ்சா புகைப்பதாகவும் அண்மையில் வீடியோ பதிவுகள் வலம் வந்தன. பெற்றோர் ஒருவர் இது குறித்து தனது ஆதங்கத்தை முகநூல் வாட்ஸ்அப் ஆகியவற்றில் பகிர்ந்திருந்தார். இதை தவிர அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா  உள்ளிட்டவை பெரும்பாலான கடைகளில் விற்கப்படுவதாகவும் போலீஸாருக்கு தொடர்ந்து தகவல்கள் கிடைத்தன.

இதனையடுத்து  கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீதும்,  சட்டத்திற்கு புறம்பாக கடைகளில் குட்கா விற்பனை செய்பவர்கள் மீதும் கடும்  நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் நகராட்சி உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத் துறையினர் அடங்கிய குழுவினர் இன்று  மயிலாடுதுறை நகரில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 60 பேர் கொண்ட போலீஸார் சாதாரண உடையில் சென்று குட்கா விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து சோதனை நடத்தினர். இதில் மயிலாடுதுறை நகரம், நீடுர், மாப்படுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள  30  கடைகளில் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.  புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். பல கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட கடைகள் நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

இதேபோல், குத்தாலத்தில் ஏ.ஆர் டிஎஸ்பி ரவிச்சந்திரன், குத்தாலம் காவல் ஆய்வாளர் அமுதராணி தலைமையில் போலீஸார் கஞ்சா குற்றச்சாட்டுக்கு உள்ளான பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் பிற பகுதிகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு 4 கடைகளில் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து சீல் வைத்துள்ளனர்.  தொடர்ந்து  மேலும் பல்வேறு கடைகளில்  சோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in