
மயிலாடுதுறை ஆதிதிராவிடர் அரசினர் கல்லூரி மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு சரிவர தரமான உணவு வழங்கப்படாமலும், விடுதியை சரிவர பராமரிக்காமலும் இருந்த மூன்று ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தின் 2-வது ஆட்சியராக மகாபாரதி கடந்த மாதம் 5-ம் தேதி பொறுப்பேற்றார். பொறுப்பேற்றது முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள், சுகாதாரம், மாணவர்களின் நலன் ஆகியவை குறித்தும் தினந்தோறும் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்கிறார். ஆய்வு செய்யும் இடங்களில் காணப்படும் குறைகளுக்கு உடனடியாக தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார்.
தான் ஆய்வு செய்த இடங்களில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் சரியாக செயல்படுத்தப்பட்டுள்ளதா என்று மீண்டும் அதே இடத்தில் ஆய்வு செய்து சரி பார்ப்பதில் அவர் வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் இன்று மயிலாடுதுறை ஆதிதிராவிடர் அரசினர் கல்லூரி மாணவர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாணவர்களுக்கு சரிவர தரமான உணவு வழங்கப்படாததாலும், விடுதியை சரிவர பராமரிப்பு பணி செய்யாமலும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து விடுதி காப்பாளர் மோகன் மற்றும் சமையலர்கள் சித்தார்த்தன், ஜெயபிரகாஷ் ஆகியோரை பணி இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
ஆட்சியரின் இந்த அதிரடி நடவடிக்கை மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் தங்கள் கடமையை சரிவர செய்வதற்கு உதவியாக இருக்கிறது என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.