உ.பி சட்டப்பேரவைத் தேர்தலில் மாயாவதி போட்டியிட மாட்டார்!

உ.பி சட்டப்பேரவைத் தேர்தலில் மாயாவதி போட்டியிட மாட்டார்!

பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி தகவல்

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி போட்டியிட மாட்டார் என அக்கட்சியின் எம்.பி-யான சதீஷ் சந்திர மிஸ்ரா கூறியிருக்கிறார்.

இந்தத் தேர்தலில் பாஜகவுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையில்தான் கடும் போட்டி நிலவுகிறது. ஆனால், இரு கட்சிகளும் ஆட்சியமைக்கப்போவதில்லை; பகுஜன் சமாஜ் கட்சிதான் ஆட்சியமைக்கும் என்று சதீஷ் சந்திர மிஸ்ரா கூறியிருக்கிறார். “சமாஜ்வாதி கட்சியிடம் 400 வேட்பாளர்கள் இல்லையென்றால், எப்படி 400 தொகுதிகளில் அவர்கள் போட்டியிடுவார்கள்?” என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

போட்டியில் பகுஜன் சமாஜ் கட்சி அதிக முனைப்பு காட்டவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே மாயாவதி தீவிர அரசியல் செயல்பாடுகளிலிருந்து விலகி நிற்கிறார். மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளில் பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் போன்ற தலைவர்கள் களமிறங்கிப் போராடுவதை ஒப்பிடும்போது மாயாவதியின் செயல்பாடுகள் மிகக் குறைவு. அது மட்டுமல்ல, ஊடகங்களுக்குப் பேட்டியளிப்பதையும் அவர் தவிர்த்துவிடுகிறார்.

2017 சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தார் மாயாவதி. அந்தத் தேர்தலில் பட்டியலினச் சமூகத்தினரின் வாக்குகள் மாயாவதிக்கு ஆதரவாக விழவில்லை. அவரைவிடவும் சந்திரசேகர் ஆசாத் போன்ற பட்டியலினச் சமூகத் தலைவர்கள் சமூகப் பிரச்சினைகளில் தீவிரமாகச் செயலாற்றுகிறார்கள். எனினும், மாயாவதிக்கான ஆதரவுத் தளம் இப்போது பாஜகவுக்குச் சாதகமாக அமைந்திருப்பதாகவே கருதப்படுகிறது.

இதற்கு முன்பும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் மாயாவதி போட்டியிட்டதில்லை. விதான் பரிஷத் என அழைக்கப்படும் உத்தர பிரதேச சட்டமேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்எல்சி-யாகவே தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் முதல்வர் பதவிவகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x