பாலியல் வன்கொடுமை செய்து சிறுவனைக் கொன்ற நபர்: பதினைந்தே நாட்களில் மரண தண்டனை விதித்தது போக்சோ நீதிமன்றம்

மரண தண்டனை
மரண தண்டனை பாலியல் வன்கொடுமை செய்து சிறுவனைக் கொன்ற நபர்: பதினைந்தே நாட்களில் மரண தண்டனை விதித்தது போக்சோ நீதிமன்றம்

9 வயது சிறுவனைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபருக்கு மதுராவில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 15 நாட்களிலேயே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

மதுராவில் கடந்த ஏப்ரல் 8ம் தேதி மாலையில் தொழுகை நடத்துவதற்கு 9 வயது சிறுவன் மசூதிக்கு சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப் பார்த்தும் சிறுவன் கிடைக்கவில்லை. இதனால் அவரின் தந்தை போலீஸில் புகார் செய்தார். உடனே போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்தனர்.

சிசிடிவி காட்சிகளில், சிறுவனின் தந்தையிடம் வேலை செய்த சைஃப் என்பவருடன் சிறுவன் செல்வதை போலீஸார் பார்த்தனர். போலீஸ் விசாரணையில், சைஃப் குற்றத்தை ஒப்புக்கொண்டார். வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள வாய்க்கால் அருகே குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. முதலில் அந்த சிறுவனை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், பின்னர் பயத்தில் கழுத்தை நெரித்து கொன்று வாய்க்காலில் வீசியதாகவும் சைஃப் போலீசாரிடம் தெரிவித்தார்.

இந்த வழக்கு போக்சோ சட்டத்தின் சிறப்பு நீதிபதி ராம் கிஷோர் யாதவ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மே 26 அன்று நிரூபிக்கப்பட்டன. கடந்த திங்கள்கிழமை, குற்றம் சாட்டப்பட்ட சைஃபுக்கு நீதிமன்றம் மரண தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை ஏப்ரல் 28 அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நீதிமன்றம் மே 2 அன்று குற்றச்சாட்டுகளை விசாரித்தது. இந்த வழக்கில் மொத்தம் 14 சாட்சிகள் இருந்தனர். இறுதி வாதங்கள் மே 22 அன்று நடந்தன. மே 26 அன்று குற்றம் சாட்டப்பட்டவர் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

இறந்த சிறுவனின் பெற்றோர்கள், இந்த வழக்கில் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் உறுதியாக இருந்தோம். ஆனால் ​​அது இவ்வளவு விரைவாக வழங்கப்பட்டது ஆச்சரியமாக உள்ளது என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in