ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். ஆளுநரை சந்திக்க வேண்டும் என்று அவர்கள் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ஒரு லட்சம் கையெழுத்துக்களின் படிவங்களை சமர்ப்பிக்கும் இயக்கம் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகில் நடைபெற்றது.
ஆளுநர் ரவி சார்பாக ராஜ்பவனில் இருந்து ஒரு அதிகாரி வந்து பொதுமக்கள் கையெழுத்திட்ட படிவங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என காவல்துறையிடம் மாதர் சங்கத்தினர் வாக்குவாதம் செய்தனர்.
மேலும் பொதுமக்களிடம் இருந்து கையெழுத்துக்கான படிவங்களை சமர்ப்பிக்க ஆளுநரிடம் அனுமதி கேட்டு இரண்டு முறை மின்னஞ்சல் அனுப்பியும் பதில் அளிக்கவில்லை என்றும் மீண்டும் ஒருமுறை மின்னஞ்சல் அனுப்பப்படும் பதில் வரவில்லை என்றால் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் அடுத்த ஒரு வார காலத்திற்குள் நடத்தப்படும் என்றனர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலச் செயலாளர் ராதிகா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’ஆளுநர் உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆளுநர் இந்த கையெழுத்துகளை பெற்றுக் கொள்ள வேண்டும். ஆளுநரை சந்திக்க அனுமதி கேட்டும் அனுமதி கொடுக்கப்படவில்லை. கையெழுத்து படிவங்களை ஆளுநரிடம் சமர்ப்பிக்க காவல்துறை எங்களுக்கு அனுமதி பெற்று தர வேண்டும்’’ என்று கூறினார்.