ஆன்லைன் வர்த்தகத்தில் அமோக லாபம் கிடைக்கும்: ஆசையால் 11 லட்சத்தை இழந்த பெண்

முத்துகிருஷ்ணன்
முத்துகிருஷ்ணன்ஆன்லைன் வர்த்தகத்தில் அமோக லாபம்:ஆசையைத் தூண்டி 11 லட்சம் மோசடி செய்தவர் கைது
Updated on
1 min read

அவினாசியை சேர்ந்த பெண்ணிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக பணம் கிடைக்கும் என்று கூறி 11 லட்சத்தை ஏமாற்றியவரை திருப்பூர் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் சமீபகாலமாக ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறி சிலர் மக்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது. ஆன்லைனில் வர்த்தகம் செய்வதன் மூலமாக அதிகமாக பணம் கிடைக்கும் என்று நம்ப வைத்து பணத்தை ஏமாற்றும் புதிய வகை சைபர் குற்றம் அரங்கேறி வருவதாக தொடர்ந்து போலீஸாரும் எச்சரித்து வந்தனர்.

இந்தநிலையில் அவினாசியை சேர்ந்த பெண் ஒருவர், திருப்பூர் மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் கடந்த மே மாதம் 29-ம் தேதி புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் தனது செல்போன் எண்ணுக்கு டெலிகிராம் மூலம் வந்த குறுந்தகவலில் ஆன்லைன் பகுதிநேர வேலை, ஆன்லைன் வர்த்தகம் செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று லிங்க் வந்தது. அந்த லிங்கில் நுழைந்து சிறிய தொகையை நான் செலுத்தினேன். அதற்கு இருமடங்கு பணம் கிடைத்தது. இவ்வாறு தொகையை அதிகமாககட்டத் தொடங்கி அதற்கேற்ப பணம் அதிகமாக வந்தது. அதன்பிறகு நம்பிக்கை ஏற்பட்டு 11 லட்சத்தை முதலீடு செய்தேன். அதன்பிறகு கமிஷன் தொகை மற்றும் நான் செலுத்திய பணத்தைக்கூட திருப்பிக்கொடுக்கவில்லை.

அதிக பணத்தை செலுத்தவைக்கும் நோக்கத்தில் நம்ப வைப்பதற்காக பணம் கொடுப்பது போல் ஏமாற்றி விட்டனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இது போன்ற டெலிகிராம் குரூப்பில் பணம் பெறும் நபர்களின் வங்கிக் கணக்குகள், செல்போன் எண்களை ஆய்வு செய்த போது பணத்தை முதலீடு செய்பவர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் போலியானவர்கள் என்பது தெரியவந்தது.

போலீஸாரின் விசாரணையில் அவினாசிப் பெண் செலுத்திய பணம், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (52) என்பவரின் வங்கிக்கணக்குக்கு சென்றது தெரியவந்தது. இந்த நிலையில் அவரை கோவை சாய்பாபா காலனியில் வைத்து சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது கூட்டாளிகள் சிலரையும் தேடி வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in