ஆந்திராவில் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்ட குரங்குகள்: பின்னணியில் ஒடிசாவினரா?

ஆந்திராவில்  கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்ட குரங்குகள்: பின்னணியில்  ஒடிசாவினரா?

ஆந்திராவில் வாழைப்பழத்தில் விஷம் வைத்து 45 குரங்குகளைக் கொன்றவர்கள் குறித்து ஸ்ரீகாகுளம் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சிலகம் கிராமத்திற்கு அருகே வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு துர்நாற்றம் வீசியது. இதையடுத்து கிராம மக்கள் நேற்று காலையில் சென்று பார்த்த போது குவியல், குவியலாக குரங்குகள் இறந்து கிடந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கிராமமக்கள், உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீகாகுளம் வனத்துறையினர், அப்பகுதியில் இறந்து கிடந்த குட்டிகள் உள்பட 45 குரங்குகளின் உடல்களைக் கைப்பற்றினர். அந்த இடத்திலேயே கால்நடை மருத்துவர்கள் மூலம் குரங்குகளின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டு அந்த பகுதியில் புதைக்கப்பட்டன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்," எங்கள் கிராமத்தில் குரங்குகளே இல்லை. வேறு இடத்தில் வாழைப்பழத்தில் விஷம் வைத்து குரங்களைக் கொன்று இங்கு வந்து வீசியுள்ளனர்" என்றனர். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீகாகுளம் வனத்துறை அதிகாரி நிஷா குமாரி கூறினார். இச்சம்பவம் குறித்து விலங்குகள் நலச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஸ்ரீகாகுளம் வனத்துறை அதிகாரி முரளி கிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுகுறித்து வனத்துறையினர் சிலர் கூறுகையில், " ஒடிசாவைச் சேர்ந்த சிலர் நேற்று முன்தினம் இரவு இறந்த குரங்குகளை வீசிச் சென்று விட்டதாக கிராமத்தில் பேச்சு நிலவுகிறது. அந்த கோணத்தில் விசாரித்து வருகிறோம். ஏனெனில், இந்த பகுதியில் குரங்குகள் இல்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர். எனவே, குரங்குகள் எங்கே கொல்லப்பட்டன, எதற்காக கொல்லப்பட்டன என்று விசாரித்து வருகிறோம். இதையடுத்து இப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகளைப் பிடிப்போம்' என்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in