
சங்கராபுரம் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்தது உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து வீட்டுமனை உட்பட 25 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்துகொண்டு, இருசக்கர வாகனம் மற்றும் காரிலும் சென்று பூட்டிய வீடுகள் மற்றும் டாஸ்மாக் கடைகளை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச்செல்வதாக பல்வேறு புகார்கள் போலீஸாருக்கு வந்த நிலையில் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் தனிப்படை போலீஸார் தொழில்நுட்ப உதவியுடன் குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு வடபொன்பரப்பி அருகே புதூர் கூட்ரோட்டில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அதிவேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியுள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, சென்னை, பெரம்பூர், புதுகாலனியைச் சேர்ந்த கார்த்திக் (19) சென்னை எருக்கஞ்சேரி பாலாஜி(23) சென்னை நேரு நகரைச் சேர்ந்த சிந்து (23) என தெரியவந்தது.
மேலும் அவர்கள் தேவபாண்டலம் மற்றும் பகண்டை கூட்டுரோட்டில் வீடு வாடகை எடுத்து தங்கி ரிஷிவந்தியம், வடபொன்பரப்பி, தியாகதுருகம், சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு, கீழ்குப்பம் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் பூட்டிய வீட்டில் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்றதும், திருக்கோவிலூர் அருகே கனகந்தல் கிராமத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்றதும் தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், ஒரு கார் மற்றும் 2 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் திருடிய நகைகள் மற்றும் பணத்தை வைத்து சங்கராபுரம் பகுதியில் ஒரு வீட்டுமனை வாங்கியதும் தெரியவந்தது.
மாவட்டத்தில் தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இவர்களிடமிருந்து வீட்டுமனை, கார், இருசக்கர வாகனம் உட்பட 25 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது.