அதிகரிக்கும் அடினோ வைரஸ் சாவுகள்: மே.வங்கத்தில் குழந்தைகளுக்கு முகக்கவசம் கட்டாயம்!

முகக்கவசத்துடன் குழந்தைகள்
முகக்கவசத்துடன் குழந்தைகள்

குழந்தைகளின் உயிரைப் பறிக்கும் அடினோ வைரஸ் பரவலை தவிர்க்க, குழந்தைகள் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம் என மேற்கு வங்கம் மாநிலம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்கம் மாநிலத்தில் அதிகரித்து வரும் அடினோ வைரஸ் பாதிப்பால் இதுவரை 19 குழந்தைகள் பலியாகி இருக்கின்றன. குழந்தைகளின் உயிரைக் குறிவைக்கும் அடினோ வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மாநிலத்தின் சுகாதாரத்துறை முடுக்கி விடப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட சுற்றறிக்கையில், விடுப்பிலிருக்கும் சுகாதாரத்துறை பணியாளர்கள் அனைவரும் உடனடியாக பணியில் சேருமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும் காய்ச்சல் கிளினிக்குகள் 24 மணி நேரமும் செயல்படுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகளை அடினோ வைரஸ் குறிவைத்த போதும், அவர்களில் நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பவர்களும், இணை நோய்களால் பீடிக்கப்பட்டவர்களும் மட்டுமே கூடுதல் அபாயத்துக்கு ஆளாகிறார்கள். ’மேற்கு வங்கத்தில் இறந்த 19 குழந்தைகளில் 6 மட்டுமே அடினோ வைரஸ் நேரடி தாக்கத்தின் காரணமாக இறந்திருக்கிறார்கள் என்றும், மற்றவர்களை அடினோ வைரஸ் தாக்கிய போதும் அவர்களின் உயிர்ப்பலிக்கு இணை நோய்களே காரணம்’ என்றும் முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கமளித்துள்ளார். மேலும், குழந்தைகளின் பாதுகாப்புக்கு உடனடியாக அவர்களுக்கு முகக்கவசத்தை கட்டாயமாக்கியும் மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

நீடித்த சளி மற்றும் காய்ச்சலுடன், தொண்டையில் புண், கண்கள் இளஞ்சிவப்பாக தென்படுதல் ஆகியவை அடினோ வைரஸ் பாதிப்புக்கான தீவிர அறிகுறிகள் ஆகும். எனவே காய்ச்சல் கண்ட குழந்தைகளை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in