ஆகாய மார்க்கத்திலும் இனி முகக்கவசத்துக்கு விடை!

ஆகாய மார்க்கத்திலும் இனி முகக்கவசத்துக்கு விடை!

கரோனா கட்டுப்பாடுகள் தளர்வு காண்பதன் எதிரொலியாக விமான பயணங்களில் முகக்கவசம் அணிவதற்கான கட்டுப்பாடு விலக்கிக்கொள்ளப்படுகிறது.

கரோனா பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் மேற்கொண்ட முதல் நடவடிக்கை, சர்வதேச விமானங்களை தடை செய்ததுதான். தவிர்க்க முடியாது விமானங்களை அனுமதிக்க நேரிட்டபோதும், பயணிகளை குறிப்பிட்ட தினங்களுக்கு தனிமைப்படுத்துதல் மற்றும் கோவிட் பரிசோதனைக்கு ஆளாக்குதல் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டன. இந்த கட்டுப்பாடுகளின் உச்சமாக விளங்கியது முகக்கவசம்! இதர கரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கப்பட்டபோதும், முகக்கவசத்துக்கான கட்டுப்பாடு அப்படியே நீடித்தது.

சர்வதேச பயணிகள் புழங்கும் விமான சேவைகளில் சிறிய அலட்சியமும் பெரும் பரவலுக்கு வழிவகுத்து விடும் என்ற அச்சமே இந்த முகக்கவச கட்டுப்பாடு நீடித்ததுக்கு காரணம். விமான பயணிகளுக்கு காத்திருப்பு அறையில் தொடங்கி, பயண நேரம் முழுமைக்கும் முகக்கவச கட்டாயம் தொடர்ந்தது. ஆகாயத்திலும் விமான சிப்பந்திகளின் அவ்வப்போதான அறிவிப்பில் முகக்கவசத்துக்கு முக்கியம் இடம் தரப்பட்டது. முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக்குதல் உள்ளிட்டவையும் தொடர்ந்தன. தற்போதைய விமானப் போக்குவரத்து துறையின் அறிவிப்பின்படி இந்த கட்டுப்பாடுகள் அனைத்துமே விலக்கிக்கொள்ளப்படுகின்றன.

நடைமுறையில் படிப்படியாக குறைந்துவரும் தொற்றுவீதம் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்துடன் கலந்த பிறகு விமான போக்குவரத்து துறை இம்முடிவுக்கு வந்துள்ளது. ஆகாய மார்க்கத்திலும் முகக்கவசத்துக்கு விடை கொடுப்பது என்பது, கரோனாவுக்கு எதிரான உலகின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியின் அடுத்த மைல்கல் எனலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in